தெம்பனிசிலும் ஜூரோங்கிலும் வசிப்போர், கிளார்க் கீயில் உள்ள கேளிக்கைக் கூடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்கு வசதியாக வெள்ளி, சனிக்கிழமைகளில் பின்னிரவு இலவச இடைவழிப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
‘சிகியூ நைட் ஷட்டல்’ இருவகை சேவைகளை வழங்குகிறது. ‘டவுன் ஷட்டல்’, ‘ஹோம் ஷட்டல்’ என்பவை அவை. மணிக்கு ஒருமுறை வழங்கப்படும் ‘டவுன் ஷட்டல்’ பேருந்தில் 23 பேர் அமரலாம். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நகர மையத்தில் உள்ள ஆறு இடங்களுக்கு அது செல்லும்.
சிகியூ @ கிளார்க் கீ (டான் டை பிளேஸ்), சோமர்செட் எம்ஆர்டி நிலையம் வெளிவாயில் ‘ஏ’ பேருந்து நிறுத்தம் (08121), ஐயோன் ஆர்ச்சர்ட், எஸ்காட் ஆர்ச்சர்ட், பிளாசா சிங்கப்பூரா (ஓல்ட்ஹம் லேன்), ராஃபிள்ஸ் சிட்டி சிங்கப்பூர் (சுவிஸ்சோட்டல் தி ஸ்டாம்ஃபர்ட் நுழைவாயில்) ஆகியவை அந்த ஆறு இடங்கள்.
‘டவுன் ஷட்டல்’ பேருந்தில் ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்குச் செல்ல 10 நிமிடங்கள் எடுக்கும்.
தெம்பனிஸ், ஜூரோங் அருகே வசிப்போர் கிளார்க் கீயிலிருந்து ‘ஹோம் ஷட்டல்’ பேருந்தில் அந்த வட்டாரங்களுக்குத் திரும்பலாம். சிகியூ @ கிளார்க் கீயிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் பேருந்து புறப்படும்.
தெம்பனிஸ் சென்ட்ரல் 4 (தெம்பனிஸ் எம்ஆர்டி வெளிவாயில் ‘பி’), ஜூரோங் (வெஸ்ட் கேட், பயணிகளை இறக்கிவிடும் பகுதி) ஆகியன அந்த இரு இடங்கள். இவற்றுக்குச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 45 பேர் அமரலாம்.

