கொவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இணையவழி இலவச மருத்துவ சேவை செப்டம்பர் 11ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 10 அல்லது அதற்கு முன் இந்த இலவச சேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், அவர்களுக்குப் பரிந்துரைத்த நாளிலிருந்து 14 நாட்களுக்குத் தொடர்ந்து இந்தச் சேவையைப் பெறுவார்கள் எனவும் அமைச்சு கூறியது.
2023 ஆண்டுப் பிப்ரவரி மாதம் முதல் கொவிட்-19 கொள்ளை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆபத்தில் உள்ள நோயாளிகள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆகியோரை இணையவழி இலவச மருத்துவச் சேவையைப் பயன்படுத்தும்படி அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்து வந்தனர்.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைத் தடுக்க இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 கொவிட்-19 நோயாளிகள் இணையவழி இலவச மருத்துவச் சேவையைப் பயன்படுத்தினர்.
இந்த நோயாளிகளின் மருத்துவ நிலைமைகள் பொதுவாகச் சமாளிக்கக் கூடியதாக இருந்ததால் அவர்களை அவசர சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படவில்லை.
இந்த இணையவழி இலவச மருத்துவச் சேவையை நிறுத்துவதால் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனச் சுகாதார அமைச்சுத் தெரிவித்தது.
மருத்துவ உதவி தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவரை நேரில் அணுகலாம் அல்லது “ப்ளுகோவேர்” மூலம் இணையவழி மருத்துவச் சேவை வழங்குநரைத் தேர்வு செய்யலாம்.

