ஜோகூர் பாரு: ஜோகூர் சாலையில் வெறித்தனமாக வேறொரு காரை உதைத்த சிங்கப்பூர் வாகனவோட்டி ஒருவருக்கு ஜோகூர் பாருவில் உள்ள நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 12) மொத்தம் 9,100 ரிங்கிட் (S$2,760) அபராதம் விதிக்கப்பட்டது.
குறும்புத்தனத்துடன் சொத்துக்குச் சேதம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் இன்னொருவரின் தன்மானத்தை இழிவுபடுத்தும் நோக்கில் சொற்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் செங் குவான் போ, 40, ஒப்புக்கொண்டார்.
இரு குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கு முறையே 4,300 ரிங்கிட்டும் 4,800 ரிங்கிட்டும் விதிக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, ஸ்கூடாயில் ஜாலான் சுத்தேரா தஞ்சோங்கில் ஜூன் 7ஆம் தேதி பிற்பகல் 2.39 மணிக்கு மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட பிஎம்டபிள்யூ காருக்குச் சேதம் விளைவித்ததாக செங்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மனிதவள நிர்வாகியான செங்மீது, பிஎம்டபிள்யூ கார் ஓட்டுநரான திரு இங் இயோவ் மெங்கை இழிவுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவரது முகத்தில் செங் எச்சில் உமிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. திரு இங்குடன் தகராற்றில் ஈடுபட்ட அடுத்த நாளான ஜூன் 8ஆம் தேதி செங்கை ஜோகூர் காவல்துறை கைதுசெய்தது.
இச்சம்பவம் குறித்து சம்பவம் நிகழ்ந்த ஜூன் 7ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதாக ஜோகூர் பாரு நார்த் காவல்துறை தெரிவித்திருந்தது. ஸ்கூடாயில் துன் ஆமினா பகுதியில் தாம் கார் ஒட்டியபோது செங் பலமுறை ஒலிப்பானை எழுப்பியதாக திரு இங், 32, அந்தப் புகாரில் கூறியிருந்தார். சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட டொயோட்டா ஆல்டிஸ் காரை செங் ஓட்டினார்.
வழக்கறிஞர் நூர்ஃபராஹின் முகம்மது யாஸித், இந்த வழக்கில் செங்கை பிரதிநிதித்தார். முதல்முறையாக குற்றம் புரிந்ததன் பேரில் தண்டனைக் குறைப்புக்கு செங் மன்றாடினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒற்றையரான செங், அவருடைய வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனித்துக்கொள்வதாகவும் மாதம் $2,000 சம்பளம் ஈட்டுவதாகவும் வழக்கறிஞர் நூர்ஃபராஹின் நீதிமன்றத்தில் கூறினார்.