சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மிகப் பெரிய சமூக கிரிக்கெட் போட்டி கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் செப்டம்பர் ஏழாம் தேதி நிறைவடைந்தது.
‘த ஃபிரெண்ட்ஷிப் கப்’ எனும் இப்போட்டியில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்.
100 அணிகளில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். மனிதவள அமைச்சும் ‘காலா’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பும் இணைந்து இப்போட்டிக்கு ஆதரவு வழங்கின.
இப்போட்டி சிங்கப்பூர் சமூக கிரிக்கெட் லீக்கின் அடுத்த கட்டமாகும். சென்ற ஆண்டு (2024) ஒரே இடத்தில் நடைபெற்ற மிகப் பெரிய கிரிக்கெட் போட்டியாக கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் அது இடம்பெற்றது. அப்போது செங்காங் கிரிக்கெட் திடலில் 102 அணிகளும் 2,220 விளையாட்டாளர்களும் 286 போட்டிகளில் மோதினர்.
இந்த ஆண்டின் போட்டி மே மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெற்றது. இம்முறை ஆறு பிரிவுகளில் செங்காங், பொங்கோல், புவாங்கோக், கிராஞ்சி ஆகிய இடங்களில் 392 போட்டிகள் இடம்பெற்றன.
சமூக உணர்வை மையப்படுத்தும் விதமாகப் போட்டிகள், 15 ஓவர் கொண்ட தனித்துவமான வடிவத்தில் விளையாடப்பட்டன.
ரயில் பொறியாளரும் காலா அமைப்பின் தலைவருமான ஷாஜி பிலிப் தலைமையில் கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலர் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தனர்.
கருவிகள் முதல் தளவாடங்கள் வரையிலான அனைத்துச் செலவுகளையும் ஏற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பரிசளிப்பு விழாவில் பேசிய திரு சியா விளையாட்டாளர்களின் துடிப்பையும் குழுவுணர்வையும் பாராட்டினார்.
“விளையாட்டு என்பது வெற்றி, தோல்வி தொடர்பானது மட்டுமன்று. ஒன்றிணைந்து கண்ணியத்துடன் விளையாடும் உணர்வுதான் முக்கியம்,” என்றார் திரு சியா.
வெளிநாட்டு ஊழியர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகள் சில நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் போனாலும், அவர்கள்தான் சிங்கப்பூரில் இருக்கும் வானுயர்ந்த கட்டடங்களின் சிற்பிகள், வீடுகளின் படைப்பாளிகள், பகிரப்பட்ட சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்கள் என்று திரு சியா குறிப்பிட்டார்.
கிரிக்கெட் எவ்வாறு வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை அளிக்கிறது என்பதையும் அதே நேரத்தில் சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பை எவ்வாறு வளப்படுத்துகிறது என்பதையும் திரு சியா எடுத்துரைத்தார்.
“இந்தப் போட்டி உங்கள் உழைப்பை மட்டுமல்லாமல் உங்கள் மனிதநேயம், நட்பு, தியாகங்களையும் அங்கீகரிக்கிறது,” என்றார் அவர்.
மனிதவள அமைச்சு கின்னஸ் சாதனை படைத்த போட்டியிலிருந்து, சிங்கப்பூர் சமூக கிரிக்கெட் லீக்கிற்கு அதன் ஆதரவை விரிவுபடுத்தியுள்ளது.
கோப்பைகள், தளவாட ஆதரவு, கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் இடமளிப்பது போன்றவற்றை அமைச்சு வழங்கியுள்ளது.
“விளையாட்டுக்கு மக்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான ஆற்றல் உண்டு. வெளிநாட்டு ஊழியர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஷாஜிக்கும் அவரது குழுவினருக்கும் ஆதரவளித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் மனிதவள அமைச்சின் செயல்பாடுகள், திட்டங்கள் பிரிவுக்கான துணைத் தலைவர் ஷிரீன் பானு.
“சமூக கிரிக்கெட் லீக் என்பது ஓட்டங்கள், விக்கெட்டுகளைப் பற்றியது மட்டுமன்று. அது, உணர்வு, ஒற்றுமை, உலகளாவிய சகோதரத்துவத்தைப் பற்றியது. ஒவ்வொரு போட்டியும் குழுவுணர்வு, விடாமுயற்சியின் கொண்டாட்டமாக இருந்தது. குறையில்லா ஏற்பாடுகள் சவால்களை மைல்கற்களாக மாற்றின. இது முடிவன்று, வரவிருக்கும் பெரிய வெற்றிகளின் தொடக்கமாகும்,” என்று ஷாஜி கூறினார்.
நவம்பர் மாத இறுதிவரை 108 அணிகள் பொருதும் புதிய போட்டியும் தொடங்கிவிட்டது.

