எரிபொருள் விலையேற்றம்: கிராப் கட்டணம் தற்காலிக உயர்வு

எரிபொருள் விலையேற்றம்: கிராப் கட்டணம் தற்காலிக உயர்வு

2 mins read
b0eb18ce-a611-436e-bab4-8015c8fea970
இந்தக் கூடுதல் கட்டண உயர்வு மே 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஓட்டுநர்களின் எரிபொருள் செலவுகளை ஈடுகட்ட உதவும் வகையில், கிராப் நிறுவனம் தமது பயணங்களுக்கான கூடுதல் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்தக் கூடுதல் கட்டணம் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் என்றும் கிராப் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகத் தமது பயனர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி அந்நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், தற்போது 50 காசாக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை 90 காசாக உயர்த்துவதாக அது கூறியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு சாதாரண டாக்சிகள், மீட்டர் பொருத்தப்பட்ட டாக்சிகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து வகை கிராப் பயணங்களுக்கும் பொருந்தும்.

இந்த மாற்றம் மே 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். சந்தை நிலவரத்தைப் பொறுத்து அது மீண்டும் மறுஆய்வு செய்யப்படும்.

இந்தக் கூடுதல் கட்டணத்திலிருந்து கிராப் எந்தவித தரகு தொகையையும் எடுத்துக்கொள்ளாது என அது குறிப்பிட்டுள்ளது.

வசூலிக்கப்படும் 90 காசுகளும் நேரடியாக ஓட்டுநர்களுக்கே சென்றடையும். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உயர்ந்து வரும் எரிபொருள் விலையைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக எரிபொருள் தேவையில் ஐந்தில் ஒரு பகுதியை வழங்கும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடங்கல்களால், உலகெங்கிலும் எரிபொருள் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது எரிபொருள் விலை, 2022ஆம் ஆண்டு உக்ரேன் போர் தொடங்கியபோது இருந்த உச்சத்தைவிட அதிகமாக உள்ளது. தற்போது பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் 95-ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு $3.40 முதல் $3.42 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்