மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் காரணமாக எரிபொருளின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள டாக்சி ஓட்டுநர்களின் கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில், பயணத் தொலைவுக் கட்டணங்களைத் தற்காலிகமாக உயர்த்தவும் செயலி மூலமாகச் செய்யப்படும் முன்பதிவுகளுக்குப் புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தவும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ திட்டமிட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) வெளியிட்டது.
இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் மார்ச் 24ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என அந்நிறுவனம் கூறியது.
தற்போது, பயணத் தொலைவு, காத்திருப்பு நேரக் கட்டணங்களானது வழக்கமான கம்ஃபர்ட் டாக்சிகளுக்கு 26 காசாகவும் ‘லிமோசின்’ டாக்சிகளுக்கு 36 காசாகவும் உள்ளன.
இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி முதல் அக்கட்டணங்கள் ஒரு காசு உயர்ந்து முறையே 27 காசாகவும் 37 காசாகவும் இருக்கும்.
மேலும், கம்ஃபர்ட்டெல்குரோவின் ‘ஸிக்’ செயலி வழியாகச் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு ஓட்டுநர் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும்.
15 வெள்ளிக்கும் குறைவான பயணக் கட்டணங்களுக்கு 50 காசும் 15 வெள்ளி, அதற்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 80 காசும் ஓட்டுநர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் நேரடியாக ஓட்டுநர்களுக்கே செல்லும். நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எங்கள் ஓட்டுநர்களின் செயல்பாட்டு நிலைத்தன்மையைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” எனச் சிங்கப்பூருக்கான கம்ஃபர்ட்டெல்குரோவின் இடைநில்லா போக்குவரத்துச் சேவை தலைவர் திரு மைக்கல் ஹுவாங் கூறினார்.
முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில், 8,400க்கும் மேற்பட்ட டாக்சிகளையும் தனியார் வாடகை வாகனங்களையும் நிர்வகிக்கும் அந்நிறுவனம், தனது சொந்த எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விலையேற்றத்தின் ஒரு பகுதியைத் தானே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 5ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலை $1.93க்கு விற்பனை செய்த அந்நிறுவனம், மார்ச் 11ஆம் தேதி அதனை $2.31ஆக உயர்த்தியது. பெட்ரோல் நிலையங்களில் அறிவிக்கப்பட்டுள்ள விலைகளைவிட தங்கள் நிறுவன எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைவாக இருப்பதாகவும் இது தங்கள் டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்குப் பயனளிக்கும் என்றும் அது கூறியது.

