ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தால் அங்கிருந்து எரிபொருள் வாங்கும் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு எரிபொருள் தட்டுபாட்டை எதிர்நோக்கும் நாடுகளில் ஆசியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய நாடுகள் அங்கிருந்து 80 விழுக்காடு எரிபொருளை தங்களின் பயன்பாட்டுக்கு எதிர்பார்த்துள்ளன.
ஈரானில் நடந்துவரும் போர் விரைவில் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதால், கொவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சிலவற்றை அமல்படுத்தி எரிபொருளை மிச்சப்படுத்த ஆசிய நாடுகள் திட்டமிடுகின்றன. இதுவரை வீட்டில் இருந்து வேலைபார்க்கும் முறையை ஆசிய வட்டார நாடுகள் நடைமுறைப் படுத்தவில்லை. இருப்பினும், அதனை சில நாடுகள் முற்றிலும் நிராகரிக்காமல் பரிசீலித்துவருவதாகத் தெரிவித்துள்ளன.
“அனைத்துலக எரிபொருள் அமைப்பு அண்மையில் பரிந்துரைத்தபடி வீட்டில் வேலைபார்ப்பது சிறந்த திட்டம். சம்பந்தப்பட்ட அமைச்சுகளை கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம் ,” என்று தென்கொரிய எரிபொருள் அமைச்சர் கிம் சங்-வான் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கருத்துரைத்தார்.
விமானப் பயணத்தைத் தவிர்த்தல் போன்ற திட்டங்களைப் பரிந்துரைத்த அனைத்துலக எரிபொருள் அமைப்பு, தட்டுப்பாட்டை சமாளிக்க அதன் உறுப்பு நாடுகளின் இருப்பில் இருந்து 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை விடுவித்தது.
அதே பரிந்துரைகளை அமைப்பு இவ்வாரம் ஆஸ்திரேலிய நகரான சிட்னியில் நடந்த மாநாட்டில் மீண்டும் வலியுறுத்தியது.
“ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தபோது நடந்த போரில் ரஷ்ய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அச்சமயம் ஐரோப்பிய நாடுகள் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து எரிபொருளை மிச்சப்படுத்தின,” என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபத்தெ பைரொல் தெரிவித்தார்.
தொழில்துறை வல்லரசான தென்கொரியா குளிக்கும் நேரம், கைப்பேசி மின்னூட்டு நேரங்களைக் குறைத்து சுத்தம் செய்யும் இயந்திர பயன்பாட்டை வீடுகளில் வார இறுதிகளில் மட்டும் செய்தல் போன்ற பொது இயக்கத்தை செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
போரினால் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு, நாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாட் மார்கோஸ் அவசர நிலையை பிரகடனப் படுத்தினார். மார்ச் மாத தொடக்கத்தில் பிலிப்பீன்ஸ், சில அரசாங்க அலுவலகங்களில் அதன் வேலை நாள்களை வாரத்துக்கு நான்காக குறைத்தது.
பாகிஸ்தான், இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளை மூடியதோடு, அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி கூறிவிட்டது. இலங்கை ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுவிடுமுறை என்று அறிவித்துள்ளது
அதிகாரிகளை வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் குளிர்சாதன அளவை 25 டிகிரி செல்சியசுக்கு குறையாமல் வைக்கவும் வீட்டில் இருந்து வேலை செய்யவும் தாய்லாந்து அறிவுரை வழங்கியுள்ளது.
அனைத்து மின்சாதனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்வாகனங்களை பயன்படுத்துமாறு சிங்கப்பூரும் அதன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

