முழு வட்டமாகிய ரயில் பாதை: மூன்று புதிய நிலையங்கள் ஜூலை 12ல் திறப்பு

முழு வட்டமாகிய ரயில் பாதை: மூன்று புதிய நிலையங்கள் ஜூலை 12ல் திறப்பு

2 mins read
நேரமும் செலவும் குறையும் ரயில் அனுபவம்
48cda492-4f21-4f3a-95dd-15b78d44d64c
கடைசி மூன்று ரயில் நிலையங்கள் திறக்கப்படுவதால் முழு வட்டமாகிய வட்ட ரயில் பாதை. - தகவல்: நிலப்போக்குவரத்து ஆணையம்

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு வட்ட ரயில் பாதை முழுமையடைந்து முழு வட்டத்தை அடைந்துள்ளது.

அந்தப் பாதையில் கடைசி மூன்று ரயில் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஜூலை 12ஆம் தேதியிலிருந்து செயல்படவிருக்கின்றன.

கெப்பல், கண்டோன்மெண்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோட் ஆகியவை புதிய ரயில் நிலையங்களாகும்.

வட்ட ரயில் பாதை முழுமையடைந்துள்ளதால் பயணிகளுக்கு நேரமும் செலவும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்ட ரயில் பாதை, ஹாபர்ஃபிரண்ட், மரினா பே நிலையங்களை இணைப்பதால் இரு நிலையங்களுக்கு இடையிலான பயணம் நேரடியாகவும் எளிதாகவும் நேரம் குறைவாகவும் இருக்கும்.

இந்தப் புதிய வழித்தடத்தில் ஒரு நிலையத்திலிருந்து அடுத்த நிலையத்திற்குச் செல்வதற்கான பயண நேரம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

இதுவரை நீண்ட பயண நேரம் காரணமாக வார இறுதி நாள்களில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லத் தயங்கிய பயணிகளுக்கு இந்த புதிய நிலையங்களின் திறப்பு பெரும் வசதியாக அமையும்.

ரயில் பயணிகள், பயணம் செய்யும் வழித் தடத்தையோ அல்லது பயண நேரத்தையோ கணக்கில் கொள்ளாமல் தொடங்கிய நிலையத்திற்கும் சேருமிடத்திற்கும் இடையே ஆகக் குறைந்த தூரத்தின் அடிப்படையிலேயே கட்டணங்கள் கணக்கிடப்படுகிறது என்று பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்துள்ளது.

மூன்று புதிய நிலையங்கள் திறக்கப்படுவதன் மூலம் சில பயணங்களுக்கான தூரம் குறைவதால் அதற்கேற்ப பயணக் கட்டணமும் குறையும் என்று அது கூறியது. “பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான நீண்ட வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்தாலும் ஆகக் குறைந்த தூரத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் அவர்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படாது,” என்று மன்றம் மேலும் விளக்கியது.

இருப்பினும், பயணிகள் ரயில் நிலையப் பகுதிக்குள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தங்கியிருந்தால் அவர்களுக்கு இரண்டு வெள்ளி கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

சிங்கப்பூரின் எந்தவொரு ரயில் பயணத்தையும் நிறைவு செய்ய இந்த 2 மணி நேரக் கால அவகாசம் தாராளமானது.

பொதுமக்கள், ஜூலை 4ஆம் தேதியன்று காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று புதிய நிலையங்களுக்கு இடையே இலவசமாகப் பயணம் செய்து புதிய பயண அனுபவத்தைப் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்