குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வழங்கும் அனைத்து முகவரி ஒட்டுவில்லைகளிலும் முழு அடையாள அட்டை எண் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி அடையாள அட்டை எண்ணுக்குப் பதிலாக முழு அடையாள எண் இடம்பெறவுள்ள இந்நடைமுறை டிசம்பர் 1ஆம் தேதிமுதல் நடப்புக்கு வரும்.
தனிநபர்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்குப் பகுதி அடையாள அட்டை எண்கள் நம்பகமானவை அல்ல என்பதால், அதிலிருந்து பொதுத் துறை படிப்படியாக விலகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இப்புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
சில தனிநபர்கள் ஒரே மாதிரியான பகுதி அடையாள அட்டை எண்களையோ ஒரே பெயரையோ கொண்டிருக்கக்கூடும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியது.
எனவே, துல்லியமான அடையாளம் காண்பதற்கு அவசியமான இடங்களில் முழு அடையாள அட்டை எண்களைப் படிப்படியாகப் பயன்படுத்தும் என்றும் தெரிவித்தது.
பகுதி அடையாள அட்டை எண்களைக் கொண்ட தற்போதைய முகவரி ஒட்டுவில்லைகளை வைத்திருப்போர் அவற்றை மாற்றத் தேவையில்லை. அவை தொடர்ந்து செல்லுபடியாகும் என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.
ஆயினும், தங்களது குடியிருப்பு முகவரியை மாற்ற விண்ணப்பித்துள்ளோர், தங்களது புதிய குடியிருப்பு முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் தனிநபர் அடையாள எண்ணின் சரிபார்ப்பை டிசம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நிறைவு செய்தால், அவர்களுக்கு இந்தப் புதிய வடிவம் பொருந்தும்.
மேலும், சேதமடைந்த அல்லது தொலைந்துபோன முகவரி ஒட்டுவில்லைக்குப் பதிலாகப் புதிய ஒட்டுவில்லையை டிசம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு கோருவோருக்கும் இந்தப் புதிய வடிவம் பொருந்தும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
