தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பன்னிரு திருமுறை முற்றோதல்

தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பன்னிரு திருமுறை முற்றோதல்

படம்: அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம்

12 Aug 2026 - 5:30 am

2 mins read

சைவ சமய வழிபாட்டுச் சாத்திரமான பன்னிரு திருமுறைகளை முழுமையாக ஓதிப்பாடும் நிகழ்ச்சியான முற்றோதல் விழாவில் பலரது பாடும் குரல்கள் ஒன்றிணைந்து இசைவழி இறை ஆராதனையில் இணைந்தன.

அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தின் ஏற்பாட்டில் முற்றோதல் விழா சனிக்கிழமை (ஜூலை 25) நடைபெற்றது. 

இடரில்லா நீரோட்டமாய்த் தொடர்ந்த திருமுறை பாராயணத்தில் அனைத்து வயது பக்தர்களும் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்குத் தொடங்கிய முற்றோதல் நிகழ்வில், பன்னிரண்டு திருமுறை நூல்களில் உள்ள 18,000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள் பக்தர்களால் கூட்டாகப் பாடப்பட்டன. 

தருமபுர ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிங்கப்பூர்வாழ் பக்தர்களுடன் நிகழ்வில் இணைந்துப் பங்கேற்றார். முற்றோதல் நிகழ்ச்சி மேடையில் அவருடன் முனைவர் சுப. திண்ணப்பனும் இணைந்தார்.

பிற்பகல் வரை நீடித்த முற்றோதலுக்குப் பிறகு, மாலை வரை செண்பக விநாயகர் ஆலயப் பாடசாலையின் பெரிய புராண நாடகம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் போன்றவை அரங்கேறின.

நிகழ்ச்சி பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள்.
நிகழ்ச்சி பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள். - படம்: ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம்

விழாவின் மாலை நேர நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார்.

சிங்கப்பூர் இந்து ஆலோசனை வாரியத்தின் தலைவர் க. செங்குட்டுவன் விழாவில் உரையாற்றுகையில், “நம் ஆலயங்கள் சமயச் சிந்தனை உள்ள ஆலயங்களாக மட்டுமல்லாமல் சமூகச் சிந்தனை உள்ள ஆலயங்களாகச் செயல்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சைவ சித்தாந்த சங்கத்தின் தலைவராக முனைவர் மீனாட்சி சபாபதி, தேவாரத்தின் பொருட்செழுமையை விவரித்தார். 

அத்துடன் தருமபுர ஆதீனமும் சமயச் சொற்பொழிவாளர் மதுசூதனன் கலைச்செல்வனும் மேடையேறி ஆன்மிகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (வலது) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (வலது) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். - படம்: அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம்

பன்னிரு திருமுறைகள் புனிதமான பக்திப் பாடல்களாக மட்டுமன்றி, அவை தமிழ் நாகரிகப் பழைமையின் சான்றாகவும் திகழ்வதாக ஆலய ஏற்பாட்டினர் தெரிவித்தனர்.

சமயப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மொழி அடையாளத்தை வலுப்படுத்தவும் முற்றோதல் போன்ற பாரம்பரிய வழக்கங்களைத் தழுவுவதற்கு இளையத் தலைமுறையினரை ஊக்குவிப்பதாக ஆலயத்தினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
சமயம்தமிழ்ஆலயம்சிவன்