முழுநேர தேசிய சேவையாளர் மரணம்

முழுநேர தேசிய சேவையாளர் மரணம்

2 mins read
மரினா பே தீயணைப்பு நிலையத்தில் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார்
3d9a43d9-d3dc-4f85-bc0a-d9370f27cd7b
மயங்கிக் கிடந்த தேசிய சேவையாளர்க்குத் தீயணைப்பு நிலையத்தில் இருந்த குடிமைத் தற்காப்புப் படையினர் உடனடியாக இதய இயக்க மீட்பு சிகிச்சை அளித்தனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மரினா பே தீயணைப்பு நிலையப் பயிற்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நினைவிழந்த நிலையில் காணப்பட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லான்ஸ் கார்ப்பரல் முகம்மது நூர் இல்ஹம் முகம்மது இஸ்வாடி என்ற அவர், பணியில் இருந்தபோது நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

தீயணைப்பு நிலையத்தில் இருந்த குடிமைத் தற்காப்புப் படையினர் உடனடியாக அவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர். பின்னர் அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

“செப்டம்பர் 6ஆம் தேதி காலை 8.15 மணிக்கு, 70 மரினா வியூ என்ற முகவரியிலிருந்து உதவிகோரி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அங்கிருந்து 20 வயது ஆடவர் ஒருவர் நினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது மரணத்தில் சூது ஏதும் இருப்பதாக காவல்துறை சந்தேகப்படவில்லை. விசாரணை தொடர்கிறது,” என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.

திரு நூர் இல்ஹம் இவ்வாண்டு பிப்ரவரியில் தேசிய சேவையில் இணைந்தார். ஆகஸ்ட் 7ஆம் தேதி குடிமைத் தற்காப்புப் பயிலகத்தில் தீயணைப்புப் பயிற்சியை அவர் நிறைவுசெய்தார். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18ஆம் தேதி மரினா பே தீயணைப்பு நிலையத்தில் அவர் பணியமர்த்தப்பட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த குடிமைத் தற்காப்புப் படை, இந்தத் துயரமான வேளையில் அவருடைய குடும்பத்தினர்க்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் கூறியது.

குறிப்புச் சொற்கள்
தேசிய சேவைஉயிரிழப்புசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைதீயணைப்பு