‘முழுநேர தேசிய சேவையாளர் மரணம் பயிற்சி தொடர்பானது இல்லை’

1 mins read
7760f07c-3dd6-4567-b3e0-f58c969fac4a
பாசிர் லாபா முகாமில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார். - படம்: கூகள் வரைபடம்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர தேசிய சேவையாளரின் மரணம் பயிற்சி தொடர்பானது இல்லை என்று தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் காவல்துறையும் சனிக்கிழமை (செப்டம்பர் 28) இரவு தகவல் வெளியிட்டன.

பாசிர் லாபா முகாமில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர் சுயநினைவின்றி கிடந்தார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆடவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது, அதன்பின்னர், தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் காவல்துறையும் கூட்டறிக்கை வெளியிட்டன.

“வெள்ளிக்கிழமையன்று முழுநேர தேசிய சேவையாளர் தமது படுக்கைக்கு அருகே சுயநினைவின்றி கிடந்தார், அவருக்கு முதலுதவி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது.

ஆடவருக்கு முடிந்தளவு சிகிச்சையளிக்கப்பட்டது, ஆடவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாண்ட நபரின் வயது அறிக்கையில் இல்லை.

சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் ஆடவரின் மரணத்தில் எந்த சூதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.

இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டு விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்