‘ஃபன் காபி’ நிறுவன மோசடி: 200 பேர் 16.34 மில்லியன் இழப்பு

‘ஃபன் காபி’ நிறுவன மோசடி: 200 பேர் 16.34 மில்லியன் இழப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Aug 2026 - 10:22 pm

2 mins read

வியட்னாமைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கி வந்த ‘ஃபன் காபி’ (Fun Coffee) எனும் உணவக நிறுவனம் தொடர்புடைய நிதி மோசடி (பொன்சி திட்டம்) குறித்துச் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

ஹாங்காங், மக்காவ் ஆகிய நாடுகளில் இத்திட்டத்தின் மூலம் 200க்கும் மேற்பட்டோர் ஏறக்குறைய 100 மில்லியன் ஹாங்காங் டாலரை (S$16.34 மில்லியன்) இழந்துள்ளனர். இது தொடர்பில், எட்டுப் பேரை அங்குள்ள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிட்காயின் போன்ற மின்னிலக்கநாணயம் மூலம் தனது காபித் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு இந்நிறுவனம் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தியது.197 முதல் 278 விழுக்காடுவரை வருடாந்தர லாபம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த ஜூலை 20ஆம் தேதி இந்நிறுவனத்தின் செயலி முடங்கியதால், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெற முடியாமல் தவித்தனர்.

சிங்கப்பூர் நிரந்தவாசியான 48 வயது பெண் ஒருவர், அதில் ஏறக்குறைய $400,000 தொகையை முதலீடு செய்து ஏமாந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமது குடும்பத்தினர், நண்பர்களையும் இதில் முதலீடு செய்ய வைத்ததாகக் கூறிய அவர், தற்போது தமது வங்கிச் கணக்கில் $80 மட்டுமே எஞ்சியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்குள் கால்பதித்த இந்நிறுவனம், பிப்ரவரி 3ஆம் தேதி ஜாலான் புசார் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அங்குச் சென்றபோது நுழைவாயிலில் காபி இயந்திரம் ஒன்று மட்டுமே காணப்பட்டது. ஃபன் காபி சிங்கப்பூரின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

வியட்னாமின் பூ குவோக் பகுதியில் இயங்கும் இந்நிறுவனம் $1 பில்லியனுக்கும் அதிகமான சொத்துகளும், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் இருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்து வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மோசடிநிறுவனம்காபிஹாங்காங்மில்லியன் வெள்ளி