தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிசிஎஃப் பாலர்களைக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு $1,500 வரை நிதி

2 mins read
கற்றலுக்கு உகந்த வீட்டுச் சூழலை மேம்படுத்த உதவும்
61aeec16-10d3-4a57-98b1-717447c222a1
ஹார்பர்ஃபிரண்ட் சென்டரில் உள்ள மதர்கேர் எக்ஸ்பிரியன்ஸ் ஸ்டோரில் பொருள்களைப் பார்வையிடும் பயனாளிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர்களின் கற்றலுக்கு உகந்த வீட்டுச் சூழலை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், குறைந்த வருமானம் கொண்ட 260 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்களுக்காகவும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவும் பொருள்களுக்காகவும் $1,500 வரை நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிதி மூலம், அமர்ந்து படிப்பதற்கான மேசைகள், விளையாட்டுப் பொருள்களுடன் குளிர்பதனப் பெட்டிகள் அல்லது மின்விசிறிகள் போன்ற உபகரணங்களையும் குடும்பங்கள் வாங்க முடியும்.

‘கிட்ஸ்டார்ட் ஸ்பார்க்கல் ஹோம்ஸ்’ என்பது இத்திட்டத்தின் பெயர். சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 18) இத்திட்டம் தொடங்கப்பட்டது.

குறைந்தது ஒரு பிள்ளையையாவது மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவன (பிசிஎஃப்) பாலர் பள்ளியில் பதிவுசெய்துள்ள குடும்பங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இந்தக் குடும்பங்கள் குறைந்தது எட்டு மாதங்களுக்கு கிட்ஸ்டார்ட்டில் பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆரம்பகால பாலர்பருவ மேம்பாடு போன்ற துறைகளில் பயிற்சிபெற்ற கிட்ஸ்டார்ட் நிபுணர்களால் இவை பரிந்துரைக்கப்படவும் வேண்டும்.

இந்தத் திட்டம், 2025க்கும் 2027க்கும் இடையில் $412,000 வரை நிதியைப் பெறும். பிசிஎஃப்க்கும் கிட்ஸ்டார்ட்டுக்கும் இடையே ஜூலை மாதத்தில் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்பாட்டின்கீழ், பிசிஎஃப்-இன் அறக்கொடைப் பிரிவிலிருந்து இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது.

கிட்ஸ்டார்ட் என்பது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பின்கீழ் செயல்படும் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும்.

இது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர்களின் வளர்ச்சிக்குக் கைகொடுத்து வருகிறது.

இந்தப் புதிய முயற்சியின்கீழ், ஹார்பர்ஃபிரண்ட் சென்டரில் உள்ள மதர்கேர் எக்ஸ்பிரியன்ஸ் ஸ்டோரில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்துகொண்டன.

அந்தக் கடையில் அறைகலன்கள், கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றை வாங்க அவர்களுக்குக் கூடுதலாக $300 வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்