நிதிப் பூசல்: அறநிறுவனங்கள் சர்ச்சைகள் தீர்வு நிலையத்தை அணுகலாம்

1 mins read
446c1af1-c55f-41ce-93ee-cbed50b5c350
பயனீட்டாளர்களின் நிதி தொடர்பான பூசல்களை நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையம் கையாண்டு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செயல்படும் சிறுநிறுவனங்களும் அறநிறுவனங்களும் ஜூலை 1ஆம் தேதிமுதல் நிதி நிறுவனங்கள் தொடர்பான புகார்களை நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

பயனீட்டாளர்களின் நிதி தொடர்பான பூசல்களைக் கையாளும் அந்த தீர்வு நிலையம், ஊழியர் மருத்துவக் காப்புறுதி, நிறுவன வாகனக் காப்புறுதி, வர்த்தக வங்கிச் சேவைகள், பெருநிறுவனக் கடனட்டை கணக்குகள், கடன் ஒப்பந்தங்கள் தொடர்புடைய புகார்களையும் இனி விசாரிக்கும்.

சிறு வர்த்தகங்களும் அறநிறுவனங்களும் தங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு மத்தியில் தனிப்பட்ட பயனீட்டாளர்கள் போலவே பல்வேறு நிதிப் பூசல்களை எதிர்கொள்கின்றன என நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையத்தின் தலைமை நிர்வாகி யூனிஸ் சுவா கூறினார்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பொது ஆலோசனை கூட்டத்தின்போது, சிறு நிறுவனங்களும் அணுகக்கூடிய வகையில் தீர்வு நிலையம் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதரவு வலுத்ததாக அவர் சொன்னார்.

மேலும், சிங்கப்பூரின் பரந்த நோக்கங்களுடன் சிறு நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தவும் லாப நோக்கமற்ற துறையை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த விரிவாக்கம் ஒத்துப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்