சீனக் கலாசாரத்தைக் கொண்டாடும் கேளிக்கை விழா

சீனக் கலாசாரத்தைக் கொண்டாடும் கேளிக்கை விழா

2 mins read
கேளிக்கை நடவடிக்கைகள், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளுடன் சீனக் கலாசாரத்தை அனுபவிக்கலாம்
a39d0d30-0204-4515-85fc-8c22f9cdb06c
இவ்விழாவின் ஓர் அங்கமாக, பாரம்பரிய சீன உடைகளை அணிந்து பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

எஸ்பிஎச் மீடியாவின் சீன ஊடகக் குழு, சீனக் கலாசாரத்தைக் கொண்டாடும் வகையில் முதன்முறையாக ‘சிங்கப்பூர் சீனக் கேளிக்கை விழா’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 25) தொடங்கி மே 17ஆம் தேதிவரை நடைபெறும் அந்த மூன்று வாரக் கால உற்சாக விழா, கலாசாரம், கேளிக்கை ஆகிய இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனைத்து வயதினரிடையேயும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவது அதன் நோக்கமாகும்.

விழாவின் தொடக்கமாக, ஏப்ரல் 25, 26ஆம் தேதிகளில் பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியில் சிறப்புத் தொடக்கவிழா நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும் அந்நிகழ்ச்சியில், சீன மொழி பேசாத குடும்பங்களும் கலந்துகொண்டு மகிழ பல்வேறு சுவாரசியமான அங்கங்கள் இடம்பெறுகின்றன.

சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங், ஏப்ரல் 25ஆம் தேதி தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அங்கு நடைபெறும் 13வது தேசியச் சீன மொழிப் போட்டியின் இறுதிச் சுற்றை அவர் பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துவார்.

அந்த விழாவில் பொதுமக்கள் பல புதிய அனுபவங்களைப் பெறலாம். உள்ளூர்க் கலாசாரத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் சாவ் பாவ் நாளிதழ் உருவாக்கியுள்ள புதிய இருமொழி இணையப் புதிர் விளையாட்டைப் பொதுமக்கள் விளையாடி மகிழலாம்.

இந்த விழாவில் சீன மொழி பேசாத குடும்பங்களும் கலந்துகொண்டு மகிழ பல்வேறு சுவாரசியமான அங்கங்கள் இடம்பெறுகின்றன.
இந்த விழாவில் சீன மொழி பேசாத குடும்பங்களும் கலந்துகொண்டு மகிழ பல்வேறு சுவாரசியமான அங்கங்கள் இடம்பெறுகின்றன. - படம்: சாவ் பாவ்

அத்துடன், ஊடகத் துறையின் பின்னணியில் நடப்பவற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள அனுபவ மண்டபத்திற்குச் செல்லலாம். அங்கு வானொலிப் படைப்பாளராகவோ செய்தி வாசிப்பாளராகவோ மாற வாய்ப்பு வழங்கப்படுகிறது. செய்தித்தாள் முகப்புப் பக்கத்தில் தங்கள் சொந்தப் படத்துடன் தலைப்புச் செய்தியாகத் தோன்றும் அங்கமும் உள்ளது.

செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக, பாரம்பரிய இசை, இசை நாடகம் (ஓப்ரா), சீன நடனம், சிங்க நடனம் எனப் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக, பாரம்பரிய இசை, நடன மேடை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக, பாரம்பரிய இசை, நடன மேடை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. - படம்: சாவ் பாவ்

அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகக் கூடங்களில் விளையாட்டுகள்மூலம் சீனக் கிளை மொழிகளைக் கற்றுக்கொள்ளும் அம்சமும் உள்ளது. மேலும், பாரம்பரிய சீன உடைகளை அணிந்து பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

சாவ் பாவ், ‌ஷின் மின் உள்ளிட்ட எஸ்பிஎச் மீடியாவின் பல்வேறு சீன ஊடகங்கள் இணைந்து அந்த மாபெரும் கலாசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

அனைத்துச் சமூகத்தினரும் இணைந்து கொண்டாடும் அந்தக் கேளிக்கை விழா, 88 பொங்கோல் வேயில் அமைந்திருக்கும் பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள zb.sg/sgcff_en என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்