நியூசிலாந்தின் ‘ஹோம்குரோன்’ நிறுவன ஆப்பிள் பழச்சாற்றில் அளவுக்கு அதிகமாக ‘பாட்டுலின்’ எனும் பூஞ்சை நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதை விற்பனையிலிருந்து ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ பேரங்காடி அகற்றியுள்ளது.
இதுதொடர்பாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு சனிக்கிழமை (நவம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில், நியூசிலாந்தின் ‘ஹோம்குரோன் 100% பியூர் என்இஸட் ஆப்பிள் ஜூஸ்’ மீட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்தப் பழச்சாற்றில் ‘பாட்டுலின்’ அளவுக்கதிகமாக இருப்பதை ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு நிலையம் கண்டுபிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து விற்பனையிலிருந்து குறிப்பிட்ட தொகுப்பை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டது.
இறக்குமதியாளரான ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ பேரங்காடி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதிவரை காலாவதித் தேதி கொண்ட பாதிக்கப்பட்ட தொகுப்பைத் தானாகவே முன்வந்து அகற்றியதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
மேலும், அந்தப் பழச்சாறு சிங்கப்பூரில் விற்கப்படாமல் இருக்கவும் உணவுப் பாதுகாப்பைத் தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூஞ்சைகளால் உருவாகும் ‘பாட்டுலின்’ நச்சு அழுகிய ஆப்பிள்களிலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களிலும் காணப்படும்.
அந்த நச்சுப்பொருள் பழச்சாறு பதப்படுத்திய பிறகும் அதில் இருக்கக்கூடும். அதனை அதிகம் உட்கொண்டால் குமட்டல், வயிற்றுக் கோளாறு, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
பாதிக்கப்பட்ட பானத்தை வாங்கியவர்கள் அதனை அருந்த வேண்டாம் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
