மாறிவரும் உலகம் பற்றி மேலும் அறிய பொதுச்சேவை அதிகாரிகளுக்குக் கூடுதல் ஏற்பாடு

மாறிவரும் உலகம் பற்றி மேலும் அறிய பொதுச்சேவை அதிகாரிகளுக்குக் கூடுதல் ஏற்பாடு

2 mins read
452858d7-5900-4895-aad5-de3127f799a1
உலகில் சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்ய புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டுமென அமைச்சர் சான் சுன் சிங் அறிவுறுத்தியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுச் சேவை அதிகாரிகளின் அனைத்துலக அனுபவத்தை மேம்படுத்த வெளிநாட்டு நியமனங்கள், பரிமாற்றங்கள், அனைத்துலக அமைப்புகளுடனான தற்காலிக வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரிக்கப்படும்.

உலகை மேலும் புரிந்துகொள்வதன்வழி பொது அதிகாரிகளும் தலைவர்களும் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றி, சிங்கப்பூரின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் சான் சுன் சிங் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தார்.

தஞ்சோங் பகார் - தியோங் பாரு குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செஸியாங்கின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, அனைத்துலக ஒழுங்கும் உள்நாட்டு நிலவரமும் அடிப்படையிலேயே மாறிவருவதாக அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

“நம் அணுகுமுறைகளைப் பற்றிய மறுபரிசீலனை தேவை. உலகில் நமக்கான இடத்தை உறுதிசெய்ய புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

சிங்கப்பூரைத் தொடர்ந்து சிறப்பாக வைத்திருக்கவும் வருங்காலத்திற்குத் தயார்செய்யவும் உலகம், நம் மக்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு சான் கூறினார்.

புதிய உலகில் சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் தொடர்ந்து முக்கியத்துவத்துடன் திகழ்வது குறித்த தெளிவைக் கூர்மைப்படுத்த உலகத்தைப் புரிந்துவைத்திருப்பது முக்கியம் என்றார் அவர்.

சிங்கப்பூர் சிறிய, திறந்த நாடாக இருப்பதால் பாதுகாப்பு, வணிகம் முதல் உணவு, தொழில்நுட்பம்வரை உலக மாற்றங்கள் நம்மை எல்லா வகையிலும் பாதிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கான சரியான முடிவுகளை எடுக்க நம் அதிகாரிகள் புதிய உலகினைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பொதுச்சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் பொதுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு சான், வலியுறுத்தினார்.

“தங்கள் அனுபவங்களையும் அனைத்துலகத் தொடர்புகளையும் கட்டியமைக்க பொதுத்துறை அதிகாரிகளுக்கு உதவும் வகையில் நாங்கள் வெளிநாட்டு வேலை நியமனங்களையும் பரிமாற்றங்களையும் அதிகரிக்கவுள்ளோம்,” என்று திரு சான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்