இளையர்களை இணைத்த ஃபுட்சால் காற்பந்து

3 mins read
83633bf9-8a8c-47ef-a7fe-3814aafd95b6
2000ஆம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்ற குழுவோடு சிறப்பு விருந்தினர் முன்னாள் மூத்த துணை அமைச்சர் ஹோ பெங் கீ, தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் டாக்டர் சித்ரா ராஜாராம். - படம்: தமிழ் முரசு
multi-img1 of 2

வீ. பழனிச்சாமி இணை ஆசிரியர்

இனம், மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியப் பாலமாகத் திகழ்கிறது விளையாட்டு.

அதிலும் காற்பந்தாட்டம் என்றாலே, நமது முன்னாள் தேசிய விளையாட்டரங்கத்தை அதிரவைத்த காலாங் கர்ஜனையை (Kallang Roar) யாரும் மறந்திருக்க முடியாது. 

ஒரு காற்பந்துத் திடலில் விளையாடும் ஆட்டத்தின் சிறு வடிவமாக உருவெடுத்ததுதான் ஃபுட்சால் எனும் சாலைக் காற்பந்தாட்டம்.

இதனை விளையாட பெரிய திடல் தேவையில்லை, அணிக்குப் பதினொரு ஆட்டக்காரர்களும் தேவையில்லை.

அதற்குரிய சிறிய கட்டாந்தரைத் திடலில் அறுவர் விளையாடும் ஃபுட்சால் எங்கும் பிரபலமாகி, ஒவ்வொரு குடியிருப்புப் பேட்டையிலும் இளையர்கள் அதனை விளையாடிக் கொண்டிருந்த வேளையில், தமிழ் முரசு நாளிதழ் 2000ஆம் ஆண்டில் ஃபுட்சால் போட்டியை ஏற்று நடத்தியது. 

அச்சுத்தொழிலில் ஈடுபடும் ஒரு நாளிதழால் இப்படிப்பட்ட ஃபுட்சால் போட்டியை ஏற்று நடத்த முடியுமா, அதற்குரிய அனுபவம் அவர்களுக்கு உண்டா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

அவர்களின் ஐயங்களைத் தகர்த்தெறிந்தது தமிழ் முரசு.

2000ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, இயோ சூ காங் விளையாட்டரங்கம், பிடோக் விளையாட்டரங்கம் என இரு அரங்குகளில் தேர்வுச் சுற்று ஆட்டங்கள் காலையில் நடத்தப்பட்டன.

பின்னர் பிற்பகல் வேளையில் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளை இயோ சூ காங் விளையாட்டரங்கில் நடத்தி நூற்றுக்கணக்கான இளையர்களை தமிழ் முரசு ஈர்த்தது.

அப்போதைய மூத்த துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் ஹோ பெங் கீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கினார். 

அதன்பிறகு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் தமிழ் முரசு மீண்டும் இளையர்களை விளையாட்டின் மூலம் ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்கியது.

இம்முறை ஃபுட்சால் போட்டி, 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. போட்டியின் ஏற்பாட்டுக்குத் தமிழர் பேரவை உதவிக்கரம் நீட்டியது. 

பிராடல் ரோட்டில் இருந்த ஒரு ஃபுட்சால் திடலில் ஐவர் கொண்ட குழுக்கள் குவிந்தன. போட்டியின் சிறப்பு அம்சமாக முன்னாள் தேசிய காற்பந்தாட்டக்காரர்களைக் கொண்ட அணியும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காற்பந்தாட்ட அணியும் மோதின. 

போட்டியின் சிறப்பு விருந்தினராக 2017ல் தேசிய காற்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த வி.சுந்தரமூர்த்தி வந்திருந்தார்.

அவரைக் காணவும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஆட்டக்காரர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாரும் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். 

‘எஸ். சந்திரதாஸ் ஃபுட்சால் சவால்’ கிண்ணத்தை வெற்றி பெற்ற குழுவுக்கு வழங்கினார் தமிழ் முரசின் அப்போதைய தலைவர் எஸ். சந்திரதாஸ்.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு, மேலும் பல புதிய குழுக்கள் தமிழ் முரசு ஏற்பாடு செய்யும் அப்போட்டியில் பங்கேற்க பேரார்வம் தெரிவித்தன.

அதன் விளைவாக, 2018ல் மீண்டும் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஃபுட்சால் போட்டியை மக்கள் கழக நற்பணிப் பேரவையுடன், தமிழ் முரசு ஏற்று நடத்தியது. இந்தப் போட்டிகள் ஈசூனில் உள்ள ஃபுட்சால் திடலில் நடைபெற்றது.

அப்போட்டியில் கலந்துகொள்ள 30க்கும் மேற்பட்ட அணிகள் பதிவுசெய்திருந்தன. அனைத்து ஆட்டங்களிலும் வென்ற குழுவுக்கு சவால் கிண்ணம் பரிசளிக்கப்பட்டது.

ஈராண்டுகள் நடந்த ஃபுட்சால் காற்பந்துப் போட்டிகளுக்குப் பல்வேறு அமைப்புகள் நிதி ஆதரவு அளித்து தமிழ் முரசின் முயற்சிகளுக்குக் கைகொடுத்தன.   

குறிப்புச் சொற்கள்