$115 மில்லியன் நிதியாதரவுடன் ‘எதிர்கால நகரங்கள்’ ஆய்வு, மேம்பாட்டுத் திட்டம்

$115 மில்லியன் நிதியாதரவுடன் ‘எதிர்கால நகரங்கள்’ ஆய்வு, மேம்பாட்டுத் திட்டம்

3 mins read
8aaf11f7-2ae3-4108-8f36-bc3b20f1f1e0
சன்டெக் மாநாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தின் மூன்றாவது நாள் அமர்வில் சிறப்புரையாற்றிய பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் (மனிதனால்) உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழலின் புத்தாக்க முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தும் ஆய்வு, மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 115 மில்லியன் வெள்ளி நிதியுடன் தொடங்கவுள்ளதாக பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா அறிவித்துள்ளார்.

‘எதிர்கால நகரங்கள்’ ஆய்வு, மேம்பாட்டுத் திட்டம் (Cities of Tomorrow Research & Development Program) எனும் தேசிய வளர்ச்சி அமைச்சின் இந்த முதன்மைத் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களில் ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலாவதாக, நிலம், நிலத்தடி, கடல் பகுதிகளைப் பயன்படுத்தும் முறைகளை மேலும் சிறப்பாக்க ஆதரவளிக்கும்.

நகரின் நெரிசல் அதிகரிக்கும்போது, மக்களின் உடல்நலனில் கவனம் கொண்டு, நகர்ப்புற வெப்பம், இரைச்சல் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு ஆதரவளிக்கும்.

மூன்றாவதாக, நகர்ப்புறச் சூழலின் தன்மை, மாறிவரும் காலநிலைக்கேற்பத் தகவமைக்க உதவுவதுடன் வாழும் தகுதியை மேம்படுத்த இயற்கை சார்ந்த தீர்வுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

சன்டெக் மாநாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நடைபெற்ற உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தின் இறுதிநாள் அமர்வில் அமைச்சர், தம் சிறப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நகரங்கள் சந்திக்கும் முக்கியச் சவால்கள் குறித்து மேயர்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அச்சவால்களை எதிர்கொள்வது குறித்து நகரங்கள் சிந்திக்கும் முறைகளும் மாற்றம் அடைந்துள்ளதை இந்த மூன்று நாள் கூட்டத்தின் மூலம் அறிந்ததாகவும் விளக்கினார்.

“தனிப்பட்ட மேம்பாடுகளுடன், பங்காளித்துவம் என்பது நகரங்களின் வளர்ச்சியை வடிவமைக்கும் ஆய்வுகளிலும் புத்தாக்கத்திலும் முதலீடு செய்வதையும் குறிக்கிறது,” என்றார் அமைச்சர் இந்திராணி.

உலக நகரங்களுக்கிடையிலான பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “ஒரு சூழலில் சிறப்பாகச் செயல்படும் தீர்வுகள், சரியான முறையில் மாற்றியமைக்கப்பட்டால் அத்தீர்வுகள் பிற சூழல்களிலும் செயல்படும்,” என்றார்.

அவ்வாறான கற்றலுக்கு உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டம் தளம் அமைத்துத் தருவதைச் சுட்டிய அவர், உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்ட ஆலோசனை மன்றத்தில் (WCS Knowledge Council) பேராசிரியர் சியோங் கூன் ஹியன் தலைமையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் இம்மன்றம்,உச்சநிலைக் கூட்ட நிகழ்ச்சி வரிசைகளை வடிவமைப்பதில் உதவியதுடன் வாழத்தகு நகரங்களுக்கான புத்தாக்கச் சிந்தனைகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

“வரும் 2050ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 68 விழுக்காட்டினர் நகர்ப்புறத்தில் வசிப்பர். மக்களின் நலனை முன்னிறுத்திய மேம்பாடுகளை மேற்கொள்வது எவ்வாறு என்பதே முக்கியக் கேள்வி,” என்று கூறிய அமைச்சர் இந்திராணி, அதற்கு மூன்று பரிந்துரைகளையும் வழங்கினார்.

மக்களின் பங்களிப்பை முதலாவது பரிந்துரையாகக் குறிப்பிட்ட அவர், “நகரங்களின் மேம்பாடுகளில், அங்கு வசிக்கும் மக்களுக்கும் பங்களிக்க வாய்ப்பு வழங்குவது ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கும்,” என்றார்.

தனியார் துறை வர்த்தகர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருடனான பங்காளித்துவம், உலக நகரங்களுக்கிடையிலான பங்காளித்துவம் ஆகியவற்றையும் அவர் பரிந்துரைகளாக முன்வைத்தார்.

‘இப்போதே செயல்படுங்கள்’ எனும் இவ்வாண்டின் கருப்பொருளைச் சுட்டிய அவர், நகரங்கள் முக்கிய முன்னெடுப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை விரைவாகச் செயல்படுத்தவும், பிணைப்புகளை ஆழப்படுத்தவும், நகரச் செயல்பாடுகளில் ஒரு முக்கிய மாற்றத்தைத் துரிதமாக்கவும் கடப்பாடு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்