தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடுமையான சூதாட்ட விதிமுறைகள்: திருத்த மசோதா நிறைவேற்றம்

1 mins read
bd1b1976-2b27-4130-9d00-6315d2609579
2023ஆம் ஆண்டு சூதாட்டம் தொடர்பான 137 குற்றச் செயல்கள் பதிவாயின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள இரண்டு சூதாட்டக்கூடங்களை நடத்தும் நிறுவனங்களையும் சூதாடுவோரையும் கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகள் அறிமுகம் காணவுள்ளன.

அதற்கான சூதாட்டக் கட்டுப்பாட்டு (திருத்த) மசோதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சூதாட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்குவது தொடர்பாகவும் சூதாட்டங்களைப் பதிவுசெய்வது தொடர்பாகவும் புதிய சட்டத்தில் விதிமுறைகள் இடம்பெறும்.

சூதாடுவோர் குடும்ப வருகை வரம்புகளை மீறுவது புதிய சட்டத்தின்படி குற்றமாகும்.

சிங்கப்பூரில் சூதாட்டம் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து குறைவாக இருப்பதாக மசோதாவின் இரண்டாவது வாசிப்பின்போது உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் குறிப்பிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பதிவான எல்லா வகைக் குற்றங்களிலும் மரினா பே சேண்ட்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா சூதாட்டக்கூடங்களில் நிகழ்ந்த குற்றங்களின் விகிதம் 0.2 விழுக்காடுதான் என்றார் அவர்.

அவ்வாண்டு அவ்விரு சூதாட்டக்கூடங்களிலும் 137 குற்றச் செயல்கள் பதிவானதாக உள்துறை அமைச்சு ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

உள்துறை அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றின் மறுஆய்வுக்குப் பிறகு மசோதா உருவாக்கப்பட்டதாகவும் திருவாட்டி சுன் தெரிவித்தார்.

சூதாட்டக் கட்டுப்பாட்டு மசோதா இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்