வாஷிங்டன்: சிங்கப்பூர் ஏற்றுமதிப் பொருள்கள் மீது அமெரிக்கா 12.5 விழுக்காடு வரி விதித்துள்ள நிலையில், வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காகச் சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வாஷிங்டனில் அமெரிக்க நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகஸ்ட் 24 முதல் 25ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வார் என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
தமது பயணத்தின் முதல் கட்டமாக நியூயார்க் நகருக்குச் செல்லும் திரு கான், அங்கு வர்த்தக மற்றும் நிதித்துறைத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குச் செல்லும் திரு கான், அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்த இருக்கிறார்.
மேலும் வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு நலன் சார்ந்த புதிய வளர்ந்துவரும் துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்தும் அவர்கள் விரிவாகக் கலந்துரையாடுவர். முன்னதாக, சிங்கப்பூர் - அமெரிக்கா இடையிலான 60 ஆண்டுகாலத் தூதரக உறவைக் குறிக்கும் வகையில் திரு கான் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்தடிமை முறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் இறக்குமதித் தடையை முறையாக அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், சிங்கப்பூர் உள்ளிட்ட 60 வர்த்தகப் பங்களிப்பு நாடுகளிடம் அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் பல்வேறு சிங்கப்பூர் ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா 12.5 விழுக்காடு வரியை விதித்தது.
”சிங்கப்பூர் கொத்தடிமை முறையை ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை. எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக விரிவான அமலாக்கக் கட்டமைப்பையும் சிறந்த வரலாற்றையும் சிங்கப்பூர் கொண்டுள்ளது,” என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்தது.


