சிங்கப்பூரில் அதிகமான இளையர்கள் தலைமறைவுக் கும்பல் நடவடிக்கைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
விசாரணையின்றி ஒருவரைத் தடுத்து வைக்கும் (CLTPA) சட்டத்தின்கீழ் சாங்கி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இளையர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது.
2024 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி 29 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய 65 பேர் சிறையில் அடைக்கப்பட்டதாக சாங்கி சிறைச் சேவைத் துறை (SPS) கூறியுள்ளது.
2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 46 ஆகவும் அதற்கு முந்திய ஆண்டு 45ஆகவும் இருந்தது.
இந்த மூன்றாண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்ட இளையர்களில் பெரும்பாலானவர்கள் தலைமறைவுக் கும்பல் நடவடிக்கைகளுக்காகப் பிடிபட்டவர்கள்.
கடுமையான குற்றங்களுக்காக வழக்குத் தொடர முடியாத நிலையிலும் பழிவாங்கலுக்கப் பயந்து சாட்சி சொல்ல யாரும் முன்வராத நிலையிலும் CLTPA என்னும் சட்டப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது.
தலைமறைவுக் கும்பல் தொடர்பு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட எந்த ஒருவரையும் தடுத்து வைக்கவோ காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கவோ அந்தச் சட்டம் அனுமதிக்கிறது என்று காவல்துறை பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
உரிமம் இன்றி கடன் கொடுத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளுக்கும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை அமைச்சால் தடுத்து வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருவரை 12 மாதம் வரை சிறையில் அடைக்கலாம்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சட்டவிரோதக் கும்பல்களைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை CLTPA சட்டத்தின்கீழ், எல்லா வயதுப் பிரிவையும் சேர்ந்த 100 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 99 பேர் தலைமறைவுக் கும்பல் நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் சிறைச் சேவைத் துறை கூறியுள்ளது.