சிங்கப்பூரின் லென்டோர் வட்டாரத்தில் உள்ள தரைவீடு மற்றும் செம்பவாங்வில் கேன்பரா பகுதியிலுள்ள கூட்டுரிமை வீட்டிலும் ஏறத்தாழ 58,000 மின்சிகரெட்டுகளை பதுக்கிவைத்திருந்த கும்பலைச் சேர்ந்த 34 வயது ராய் டான் ஜுன் ஜியே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சட்டவிரோதக் கும்பலில் தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முதல் நபர் இவராவார்.
சட்டவிரோதக் கும்பல் சட்டத்தின்கீழ் அத்தகைய கும்பலில் ஒருவராகச் செயல்பட்டது, விற்பனைக்காக மின்சிகரெட் கருவிகளை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த ஒருவரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட இந்தக் கும்பலில் 14 பேர் வரை அங்கம் வகித்துள்ளனர். இவர்கள் நாளொன்றுக்கு 210 ‘ஆர்டர்கள்’ வரை விநியோகம் செய்து வந்தனர்.
பகுதி விநியோகிப்பாளராகச் செயல்பட்டு மொத்தம் $45,000 வரை சம்பாதித்த டான், 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அன்று நடத்தப்பட்ட சோதனையில் லென்டோர் வீட்டில் கிட்டத்தட்ட 20,000 பொருள்களும் கேன்பரா வீட்டில் ஏறத்தாழ 38,000 பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டானுக்கு 11 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் $45,000 அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


