சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தின் ‘பிசினஸ் கிளாஸ்’ வகுப்பில் பயணம் செய்வோரைக் குறிவைத்து அவர்களின் உடைமைகளை விமானத்திலேயே திருடும் கும்பல் கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு விமானப் பயணிகளின் உடைமைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த ஆடவருக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23), 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. லியு மிங் என்ற 26 வயதுச் சீன நாட்டவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, துபாயிலிருந்து சிங்கப்பூர் வரும் எஸ்ஐஏ விமானத்தில் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணம் செய்தார். அந்த விமானம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தது.
ஆடவர் அங்கம் வகித்த குற்றக்கும்பல் அவருக்கான விமானப் பயணச்சீட்டைப் பதிவு செய்திருந்தது. பயணத்தின்போது சிங்கப்பூர் நேரப்படி, அதிகாலை 2 மணியளவில் அவர் இருக்கையைவிட்டு எழுந்து, தனக்கு முன்னாலிருந்த ஐந்து இருக்கை வரிசைகளைக் கடந்து உறங்கிக் கொண்டிருந்த மற்றொரு பயணியின் தலைக்குமேலிருந்த உடைமைகள் வைக்கும் பகுதியைத் திறந்தார்.
அங்கிருந்த அந்தப் பயணியின் பயணப் பையை எடுத்துக்கொண்டுத் தனது இருக்கைக்குத் திரும்பினார் லியு மிங். அந்தப் பயணப்பையில் இருந்த S$10,500 ரொக்கத்தையும் S$86,000 மதிப்புள்ள ஆடம்பரக் கைக்கடிகாரங்களையும் எடுத்துக்கொண்டார்.
அதனைக் கண்ட பாதிக்கப்பட்ட ஆடவரின் மனைவி, லியு மிங்கைத் தடுத்து கேள்வியெழுப்பியபோது, தான் குழப்பமடைந்து தவறுதலாக அப்படிச் செய்துவிட்டதாகக் கூறினார்.
பொருளை இழந்தவரின் மனைவி நடந்தவற்றை விமானச் சிப்பந்திகளிடம் தெரிவித்தார். விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கிய பிறகு லியு மிங் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மீது ஒரு திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தொடர் விசாரணைக்குப் பிறகு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ‘பிசினஸ்’ வகுப்புப் பயணிகளைக் குறிவைத்து விலை உயர்ந்த பொருள்களைத் திருடும் கும்பலில் அந்தக் குற்றவாளியும் ஒருவர் எனக் கண்டறியப்பட்டது.
விமானப் பயணிகளைக் குறிவைத்துத் திருடும் கும்பலின் உறுப்பினர்கள் இருவராகச் சேர்ந்தும் செயல்படுவர். உலக அளவில் இந்த வகையான விமானப் பயணங்களில் நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குற்றக் கும்பல்கள் சிங்கப்பூர் விமானங்களோடு ஆசியப் பயணப் பாதைகளையே அதிகம் குறிவைப்பதாகவும் சங்கம் கூறியுள்ளது.
விமானப் பயணத்தின்போது திருடியதற்காக இவ்வாண்டு குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரில் நால்வர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

