எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் அடுத்த 3 மாதத்திற்குக் குறையவுள்ளன

2 mins read
244239c5-6858-4755-89ba-f55a315dc085
மின்சாரக் கட்டணம், கிலோவாட்-மணிக்கு 0.84 காசும் எரிவாயுக் கட்டணம், கிலோவாட்-மணிக்கு 0.67 காசும் குறையவிருக்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் செலுத்தும் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் குறையவிருக்கின்றன. எரிசக்தி, எரிபொருள் செலவுகள் குறைந்ததே அதற்குக் காரணம்.

மின்சாரக் கட்டணம், பொருள் சேவை வரி சேர்க்கப்படும் முன்னர், கிலோவாட்-மணிக்கு 0.84 காசு குறையவிருக்கிறது. அதே நேரம், குடும்பங்கள் செலுத்தும் எரிவாயுக் கட்டணம், கிலோவாட்-மணிக்கு 0.67 காசு குறைவாக இருக்கும்.

முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணம், மூன்று விழுக்காடு குறைந்திருக்கும் என்று எஸ்பி குழுமம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

நாலறை வீட்டில் வசிக்கும் சராசரிக் குடும்பமொன்று, அதன் மாதாந்தர மின்சாரக் கட்டணம், பொருள் சேவை வரிக்கு முன்பு, $3.17 குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

எரிவாயுவை விநியோகிக்கும் சிட்டி எனர்ஜி நிறுவனமும் கட்டண மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டது. எரிவாயுக் கட்டணம் அடுத்த மூன்று மாதத்தில் கிலோவாட்-மணிக்கு 22.35 காசிலிருந்து 21.68 காசுக்குக் குறையும் என்று அது தெரிவித்தது.

முந்திய காலாண்டில் எரிசக்திச் செலவுகள் அதிகமாக இருந்ததால் எரிவாயு, மின்சாரம் இரண்டுக்கும் குடும்பங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறப்பட்டது.

எரிசக்திச் சந்தை ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டும் எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜி நிறுவனமும் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை மறுஆய்வு செய்கின்றன.

உலக அளவில் எரிபொருள் விலையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து மின்சார, எரிவாயுக் கட்டணங்கள், காலாண்டுக்குக் காலாண்டு மாறுபடும்.

குறிப்புச் சொற்கள்