எரிசக்தி, எரிபொருள் செலவுகள் குறைந்திருப்பதன் காரணமாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் குறையவுள்ளன.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை குடும்பங்களுக்கான மின்சாரக் கட்டணம் 2.6 விழுக்காடு குறையும் என எஸ்பி குழுமம் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தது.
பொருள், சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) முன்பு, மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு (கிலோவாட்மணி) 29.10 காசாக இருக்கும். தற்போது அது 29.88 காசாக உள்ளது.
எரிசக்தி செலவுகள் குறைந்திருப்பதன் காரணமாக, மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 0.78 காசு குறைவாக இருக்கும் என எஸ்பி குழுமம் விளக்கியது.
நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மாத மின்கட்டணம், $114.92லிருந்து $3 குறைந்து, $111.92 ஆகும் (ஜிஎஸ்டிக்கு முன்பு).
எரிவாயு தயாரிப்பு, விற்பனையாளரான சிட்டி எனர்ஜி திங்கட்கிழமை வெளியிட்ட வேறோர் அறிக்கையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயுக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 0.45 காசு குறையும் என்று தெரிவித்தது. செலவுகள் குறைந்திருப்பதே இதற்குக் காரணம்.
இதன்படி, குடும்பங்களுக்கான எரிவாயுக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 22.97 காசாக இருக்கும் (ஜிஎஸ்டிக்கு முன்பு). தற்போது அது 23.42 காசாக உள்ளது.
ஜிஎஸ்டி சேர்த்து, ஒரு யூனிட் எரிவாயுக் கட்டணம் 25.04 காசாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
உலகளவில் எரிபொருள் விலைகள் வேகமாக மாறுவதால் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் காலாண்டு அடிப்படையில் ஏற்ற இறக்கமாக உள்ளன.