2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூரில் மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் சிறிது குறைவாக இருக்கும்.
எஸ்பி குழுமத்தின் மின்சாரக் கட்டணங்கள் தற்போதைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3.4 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று அந்தக் குழுமம் திங்கட்கிழமை (டிசம்பர் 30) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அதன்படி, ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் கிலோவாட் (kWh) ஒன்றுக்கான கட்டணம் 28.12 காசுகளாக இருக்கும். அந்தக் கட்டணம் தற்போது 29.10 காசுகளாக உள்ளது. பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கிடப்படாத கட்டணங்கள் இவை.
அந்த வகையில், நாலறை வீவக வீட்டில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் சராசரி மாதாந்தர மின்சாரக் கட்டணம், ஜிஎஸ்டி சேர்க்கப்படாமல் $3.58 குறைவாக இருக்கும்.
மின்சாரக் கட்டணம் நான்கு அம்சங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அவற்றில் எரிசக்திச் செலவுகளும் மின்சார நிலையங்களின் நடைமுறைச் செலவுகளும் குறிப்பிடத்தக்கவை.
இதற்கிடையே, சிட்டி எனெர்ஜி நிறுவனம் எரிவாயு விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
குழாய் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயுவைத் தயாரித்து சில்லறை விலையில் விற்பனை செய்கிறது அந்த நிறுவனம்.
தொடர்புடைய செய்திகள்
2025 ஜனவரி முதல் மார்ச் வரை கிலோவாட் எரிவாயுவின் கட்டணம் 22.72 காசுகளாகக் குறையும் என்று அந்நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அந்தக் கட்டணம், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான தற்போதைய காலாண்டில் 22.97 காசுகளாக உள்ளது.
ஜிஎஸ்டியை சேர்த்துக் கணக்கிடுகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான எரிவாயுக் கட்டணம் கிலோ வாட்டுக்கு 24.76 காசுகளாக இருக்கும்.
உலக எண்ணெய் விலைகளுக்கு ஏற்ப காலாண்டுக்குக் காலாண்டு மின்சார, எரிவாயுக் கட்டணங்களில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று எஸ்பி குழுமமும் சிட்டி எனெர்ஜி நிறுவனமும் தெரிவித்து உள்ளன.

