எரிவாயு விலை ஏற்றம்: வாடகை வாகன கட்டணம் தற்காலிக உயர்வு

எரிவாயு விலை ஏற்றம்: வாடகை வாகன கட்டணம் தற்காலிக உயர்வு

2 mins read
பொது டாக்சி நிறுவனங்களும் மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் அவற்றின் கட்டணங்களை உயர்த்தியுள்ளன
95679094-34b7-421d-8633-72f778b3bae9
தனியார் வாடகை வாகனங்களில் கிராப், கோஜெக், டடா ஆகியவை அடங்கும். டாக்ஸிகளைப் போல அவற்றை சாலைகளில் கையசைத்து நிறுத்தமுடியாது. இணையம் வழி முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
ஓட்டுநர்கள் எரிவாயு உயர்வை சமாளிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று டடா, கோஜெக் நிறுவனங்கள் மின்னஞ்சலில்  தெரிவித்தன.
ஓட்டுநர்கள் எரிவாயு உயர்வை சமாளிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று டடா, கோஜெக் நிறுவனங்கள் மின்னஞ்சலில் தெரிவித்தன. - படம்: சிஎன்ஏ ஊடகம்

உயர்ந்துவரும் எரிவாயு விலையை அதன் ஓட்டுநர்கள் சமாளிக்க டடா, கோஜெக் ஆகிய தனியார் வாடகை வாகனங்களில் தற்காலிகமாகக் கட்டணங்கள் ஏற்றப்படுவதாக அவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

அந்த விலை ஏற்றங்கள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் எனவும் அவை தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் 31ஆம் தேதி, கிராப் நிறுவனம் மத்திய கிழக்கில் போர் தொடர்வதால் ஏப்ரல் 7ஆம் தேதிமுதல் தற்போதைய 50 காசிலிருந்து 70 காசாக அதன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியது.

அதன்பிறகு இந்த இரண்டு தனியார் வாடகை வாகன நிறுவனங்களின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

உலகின் மொத்த எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றின் ஐந்தில் ஒரு பங்கு விநியோகம் ஹோர்முஸ் நீரிணையில் இருந்துதான் செய்யப்படுகிறது.

அந்த வட்டாரத்தில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் எரிவாயு, எண்ணெய் ஆகிய இரண்டின் விலை உலகெங்கும் ஏற்றம் கண்டுள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி பயணிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் டடா, கோஜெக் ஆகிய இரு நிறுவனங்களும் அவற்றின் சேவைக் கட்டண உயர்வை அறிவித்தன.

அதன்படி, ஏப்ரல் 10ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை அனைத்துப் பயணங்களுக்கும் 50 காசிலிருந்து 90 காசாக கட்டணம் உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஓட்டுநர்கள் எரிவாயு உயர்வைச் சமாளிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அவை அறிவிப்பில் தெரிவித்தன.

பொது டாக்சி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை அவற்றின் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. அவற்றில் கிராப்கேப், ஸ்ட்ரைட்ஸ், பிரைம் டாக்சி ஆகியன அடங்கும்.

குறிப்புச் சொற்கள்