சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கும் கேட்ஸ் அறநிறுவனம்

2 mins read
20dd7f55-3c12-420b-b64f-8b10033cabaf
ஆசிய அருட்கொடை உச்சநிலை மாநாட்டின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மே 5ஆம் தேதி கலந்துகொண்ட கேட்ஸ் அறநிறுவனத்தின் தலைவரும் அறங்காவலருமான பில் கேட்ஸ் (இடது) உரையாற்றுகிறார். அருகில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கேட்ஸ் அறநிறுவனம், சிங்கப்பூரில் ஓர் அலுவலகத்தைத் திறக்கும் என்று அதன் தலைவரும் அறங்காவலருமான பில் கேட்ஸ் திங்கட்கிழமை (மே 5) தெரிவித்தார்.

“அறிவியலை அணுகவும், மனிதநேய சமூகத்துடனும் இங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகளுடன் கூட்டு சேரவும் கேட்ஸ் அறக்கட்டளை இங்கு ஓர் அலுவலகத்தை அமைக்கிறது,” என்று பெருஞ்செல்வந்தரும் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனருமான திரு கேட்ஸ் கூறினார்.

தெமாசெக்கின் அருட்கொடை பிரிவான தெமாசெக் டிரஸ்ட் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டில் அவர் பேசினார்.

மேலும் மக்கள் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான வாழ்க்கையை வாழ உதவுவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்குமான பரந்த அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என கேட்ஸ் அறக்கட்டளை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இந்த அறநிறுவனத்தின் இருப்பு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடனான அதன் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதையும், உலகளாவிய சுகாதாரம், மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் முன்னேற்றத்தை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

கேட்ஸ் அறக்கட்டளையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குநர் ஹரி மேனன், “சிங்கப்பூரின் புதுமை மற்றும் அருட்கொடைத் தலைமை, இந்த வட்டாரத்திலும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வுகளை அளவிடுவதற்கு உதவும் ஒரு சிறந்த நடுவமாக அமைகிறது,” என்று கூறினார்.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் அமையும் இந்த சிங்கப்பூர் அலுவலகம், கேட்ஸ் அறநிறுவனத்தின் 12வது அலுவலகமாகும். இதன் தலைமையகம் அமெரிக்காவின் சியாட்டிலிலும், மற்றோர் அமெரிக்க அலுவலகம் வாஷிங்டனிலும் உள்ளது. இதன் மற்ற ஒன்பது அலுவலகங்கள் பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, செனகல், கென்யா ஆகிய நாடுகளில் உள்ளன.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் ஒரு கலந்துரையாடலில் பேசிய திரு கேட்ஸ், சிங்கப்பூர் தலைவர்களைச் சந்திக்க இரண்டு நாள்கள் குடியரசில் இருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையே மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மே 5ஆம் தேதி திரு கேட்சுக்குப் பகல் விருந்தளித்தார்.

“கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் வர்த்தகங்களையும் ஆர்வங்களையும் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து கொண்டு வருவதையும், நமது சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்வதையும், இவ்வட்டாரத்தில் நமது உறவுகளை ஆழப்படுத்துவதையும் வரவேற்கிறோம்,” என்று திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்