‘லயன்ஸ்’ நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கேவின் லீ

3 mins read
38f2a38c-47e8-4374-81a4-15c249c29b8d
தேசிய அணியின் புதிய நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றார் கேவின் லீ (வலமிருந்து இரண்டாவது). அவருக்கு சீருடையைத் தருகிறார் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் (எஃப்ஏஎஸ்) துணைத் தலைவர் டெஸ்மண்ட் ஓங். அவர்களுடன் எஃப்ஏஎஸ் தலைவர் ஃபோரஸ்ட் லீ (இடக்கோடி), பொதுச் செயலாளர் பத்ரி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேசியக் காற்பந்து அணியின் நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கேவின் லீ, 35, வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அறிவிக்கப்பட்டார்.

18 மாத ஒப்பந்தத்தில் அவரும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவரான ஃபோரஸ்ட் லீயும் கையெழுத்திட்டனர். இதன்வழி 2027 ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி (ஏஎஃப்சி) வரை அவர் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருப்பார்.

இரு வாரங்களுக்கு முன்பு ஹாங்காங்கை வீழ்த்தி 2027 ஏஎஃப்சிக்கு சிங்கப்பூர் தகுதிபெற்றதையடுத்து, அதுவரை அணியின் தற்காலிகத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த கேவின் லீ, நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அது உறுதியானது.

ஹாங்காங்கில் வெற்றிபெற்ற காணொளியைக் கண்டதும் கேவின் லீ கண்கலங்கினார்.

“கேவினைத் தேர்ந்தெடுப்பது எளிதில் எடுத்த முடிவல்ல. தேசிய அணியாக ஒரு விளையாட்டில் நாம் நன்றாகச் செய்தால் மொத்த சிங்கப்பூருக்கும் தெரியும். ஸ்போர்ட்எஸ்ஜி, அமைச்சு, சமூகத்தினர் எனப் பலதரப்பினரும் இந்த முடிவில் பங்கேற்றனர்,” என்றார் திரு ஃபோரஸ்ட் லீ.

இனி அணிக்காகக் கேவின் எதைக் கேட்டாலும் அதற்குத் தம் பதில் ‘ஆமாம்’ என்றுதான் இருக்கும் என்றார் திரு லீ.

“மொத்தம் 67 பயிற்றுவிப்பாளர்களைளைச் சந்தித்து, அவர்களில் 20 பேருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் நாளடைவில், நம் சொந்த நாட்டவரே இப்பொறுப்பை ஏற்கத் தலைசிறந்தவர் எனத் தெரிந்தது. அதுவும் உள்ளூர் விளையாட்டாளர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்துவதில் சிங்கப்பூரரைவிட வேறு யார் சிறப்பாகச் செய்யமுடியும்?

“மேலும், விளையாட்டாளர்களுக்கும் கேவின் தலைமையில் விளையாடப் பிடித்துள்ளது. அதுவே வெற்றிக்கான பயணத்தில் பாதி தூரம் கடந்தது போன்றது,” என்றார் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் துணைத் தலைவர் டெஸ்மண்ட் ஓங்.

தலைமைப் பயிற்றுவிப்பாளராக, தம் அடுத்தகட்ட திட்டங்களைப் பகிர்ந்தார் கேவின்.

“நம் விளையாட்டாளர்களுக்கு நாம் தெளிவான திட்டத்தை வழங்கவேண்டும். இப்போது கூடுதல் நேரம் உள்ளது. ஆசியக் கிண்ணம் வருமுன், இன்னும் கூடுதலானோர் விரும்பும் காற்பந்தைத் தேசிய அணியாக நாம் படைக்க விரும்புகிறோம். நம் இலக்கு, சிங்கப்பூரர்களைப் பெருமைப்படுத்தும் தேசிய அணியை உருவாக்குவது,” என்றார் கேவின்.

28 வயதில், சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து வரலாற்றில் ஆக இளையத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் சாதனைப் படைத்தவர் கேவின்.

சிங்கப்பூரின் முந்தைய தலைமைப் பயிற்றுவிப்பாளர் சுடோமு ஓகுரா, ஜூன் மாதம் பணியிலிருந்து விடுபட்டபோது, தற்காலிகத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கேவின் பொறுப்பேற்றார். அதன்பின், அவரது தலைமையில் சிங்கப்பூர் காற்பந்து அணி மறுமலர்ச்சியடைந்துள்ளது.

“ஆசிய கிண்ணத்தில் நாம் ஏற்கெனவே நம் இலக்கை அடைந்துவிட்டோம் என்று எண்ணுகிறேன். நம் இளம் விளையாட்டாளர்களுக்கு இது நல்ல அனுபவமாக இருக்கும். ஆசிய கிண்ண இறுதிச்சுற்றில் முதல் கோல் போட்டால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு தருணமும் வெற்றிவாய்ப்பாக அமையக்கூடும்,” என்றார் திரு ஃபோரஸ்ட் லீ.

ஹாங்காங் வெற்றிக்குப் பின் அவர் அறிவித்திருந்த $2 மில்லியன் தன் சொந்த பணம் என்ற அவர், கூடுதலான ஆதரவாளர்கள் முன்வருவர் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். “சிங்கப்பூரில் ஆளுக்கு $1 தந்தாலே $7 மில்லியன் கிடைத்துவிடும்,” என விளையாட்டாகக் கூறினார்.

இதையடுத்து, சிங்கப்பூர் காற்பந்து அணி பங்ளாதேஷ் உடன் மோதும். 2026 ஆசியான் காற்பந்துப் போட்டிகளிலும் அது பங்கேற்கும். எதிர்காலத்தில், சிங்கப்பூர் அணி விளையாடினால், விளையாட்டரங்கே நிரம்பவேண்டும் என்பதே தன் இலக்கு என்றார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்