பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜனவரி 14) வெளியாகின.
தேர்வு எழுதிய 22,468 மாணவர்களில் 99.8 விழுக்காட்டினர், அதாவது 22,430 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
96.8 விழுக்காடு மாணவர்கள் குறைந்தது 3 பாடங்களில் C6 அல்லது அதற்கும் மேலான தரநிலைகளைப் பெற்றுள்ளனர்.
86.9 விழுக்காடு மாணவர்கள் குறைந்தது 5 பாடங்களில் C6 அல்லது அதற்கும் மேலான தரநிலைகளைப் பெற்றுள்ளனர்.
இது, முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடத்தக்கது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஃபஹீமா ஷிஃபா முகமது பைசல்.
‘ஸ்டெம்’ (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
“நான் என் நண்பர்களுடன் சேர்ந்து செய்த அறிவியல் ஆய்வுப்பணி ஒன்று எனக்கு மிகவும் பிடித்த ஒரு முயற்சி. ஆய்வாளர்கள் எவ்வாறு தரவுகளைச் சேகரித்து, வினாக்களை எழுப்பி, கருதுகோள்களை உருவாக்குகின்றனர் என்பதை நான் கற்றுக்கொண்டேன்,” என்று தமிழ் முரசிடம் ஃபஹீமா பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
வகுப்பறையைத் தாண்டி உலகில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை ‘ஸ்டெம்’ தமக்கு உணர்த்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
எதிர்காலத்தில் அறிவியல் துறைக்குப் பங்களிப்பதே இவரது கனவு.
தொடக்கக் கல்லூரிகள், மில்லெனியா கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பயன்படுத்தி கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை (JAE) மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் காலம் புதன்கிழமை (ஜனவரி 14) மாலை 4 மணிக்குத் தொடங்கி வரும் திங்கட்கிழமை (ஜனவரி 19) மாலை 4.30 மணிவரை நீடிக்கும்.
தங்களுக்குள் பல்வேறு தெரிவுகளை ஆராய்ந்து, தங்கள் அடுத்த கட்ட கல்விப் பாதை குறித்து தகவலறிந்தபின் முடிவுகளை எடுக்கும்படி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விவரங்களுக்கு மாணவர்கள் https://www.moe.gov.sg/coursefinder மற்றும் https://go.gov.sg/mysfsec இணையத்தளங்களை நாடலாம்.
மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் அல்லது கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டு ஆலோசகர்களுடனும் கலந்தாலோசிக்கலாம்.

