களம் புதிது; காட்சியும் புதிது

2 mins read
9c1b77da-5180-4c9f-8685-d869ce3835e1
அல்ஜுனிட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர் ஜெதீஸ்வரன் ராஜு. - படம்: மசெக

இரு வாரத்திற்குள் 2025 பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் காண அரசியல் கட்சிகள் வரிசை பிடித்து நிற்கும் நிலவரத்தைச் சற்று பார்வையிடலாம்.

2011 தேர்தலில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் போட்டி என்னும் வேறுபட்ட களம் 2015 தேர்தலில் உருவானது. 2020 தேர்தலிலும் அது தொடர்ந்தது.

கடந்த தேர்தலைப்போல இப்போதும் பத்து எதிர்க்கட்சிகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. வேட்பாளர்களை அவை அறிவித்து வருகின்றன. எனவே, இந்தத் தேர்தலிலும் எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இருக்கும் என கருதத் தோன்றுகிறது.

போட்டி அதிகரிப்பதற்கு ஏற்ப, தேர்தல் களத்தில் கட்சிகள் புதிதாகத் தோன்றுவதும் வழக்கமாகி வருகிறது.

2015 தேர்தலில் மக்கள் சக்தி கட்சியும் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை (SingFirst) கட்சியும் களம் கண்டன.

தொடர்ந்து, 2020 தேர்தலில் மூன்று புதிய கட்சிகள் களமிறங்கின. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, மக்கள் குரல், ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி ஆகியன அவை.

தற்போதையை தேர்தலில் புதிதாக ஒரு கூட்டணியும் ஒரு கட்சியும் களம் காண்கின்றன.

2020 தேர்தலில் தலா 2 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்ற மக்கள் குரல் கட்சியும் சீர்திருத்தக் கட்சியும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியுடன் கைகோத்து சீர்திருத்த மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

அதேபோல, சீர்திருத்தக் கட்சியில் இருந்து பிரிந்து உருவான சிங்கப்பூர் ஐக்கிய கட்சி இந்தத் தேர்தலில் அறிமுகம் காண்கிறது.

தேர்தல் களத்தில் அறிமுகம் கண்ட கட்சி ஒன்று திடீரென்று பேசப்படும் கட்சியாக மாறியதை 2020 தேர்தல் களம் கண்டது. புதிதாகக் களமிறங்கிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) 10 விழுக்காட்டும் மேல் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

குறிப்பாக, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் கடும் போட்டியைக் கொடுத்த அக்கட்சி, அந்தத் தொகுதியில் மட்டும் 48.31% வாக்குகளைப் பெற்றது. அதன் பின்னர், அந்தக் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்