எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் நிற்கவுள்ளார்.
செம்பவாங் வெஸ்ட்டில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் இதை அறிவித்தார்.
அதே சமயம், புதிய செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் தாம் நிற்கவுள்ளதாக டாக்டர் சீ அறிவித்தார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, செம்பவாங் குழுத்தொகுதியிலும் களமிறங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புக்கிட் பாஞ்சாங்கில் மக்களைச் சந்தித்துவரும் பால் தம்பையா
“சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனித்தொகுதி புக்கிட் பாஞ்சாங். நாங்கள் இதுவரை அங்குள்ள ஏறக்குறைய 150 அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளில் 135க்கு வீடு வீடாகச் சென்றுள்ளோம். அங்குள்ள சமூகத்தினருடனும் உரையாடியுள்ளோம்.
“அங்குள்ள காப்பிக் கடைகள், உணவங்காடி நிலையங்களில் குடியிருப்பாளர்களுடன் உரையாடி, அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்தோம். அவர்களும் எங்களைப் பற்றிப் புரிந்துகொண்டனர்.
“நாங்கள் என்ன மாதிரியான தேநீர் வாங்கப் போகிறோம் என்றுகூட அவர்கள் சொல்வார்கள்,” என ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் தம்பையா கூறினார்.
புதிய செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளராக சீ சூன் ஜுவான்
2020 பொதுத் தேர்தலிலும் 2016 இடைத் தேர்தலிலும் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் டாக்டர் சீ போட்டியிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், தேர்தல் தொகுதி எல்லைகள் மறுவடிவமைப்பினால் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி கலைக்கப்பட்டுள்ளது. இதனால், புக்கிட் பாத்தோக்கிற்குப் பதிலாக செம்பவாங் வெஸ்ட்டில் நிற்கவுள்ளதாக டாக்டர் சீ கனத்த மனத்துடன் கூறினார்.
“இருந்தாலும், புக்கிட் பாத்தோக்கை விட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் கருத்துகள் புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்கும் உதவும்,” என்றார் டாக்டர் சீ.
புதிய புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியிலும் ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியிலும் கட்சி போட்டியிடுமா என்பதை வரும் நாள்களில் அறிவிக்கவுள்ளதாக டாக்டர் சீ கூறினார். அடுத்த இரு வாரங்களில் மற்ற தொகுதிகள் சார்ந்த திட்டங்கள் பற்றிய விவரங்களையும் எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
செம்பவாங் வெஸ்ட்டில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
டாக்டர் சீயும் கட்சி உறுப்பினர்களும் ஏறக்குறைய 75 தொண்டூழியர்களும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில், ஏறக்குறைய 100 அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களுக்குச் சென்று கட்சியின் துண்டுப் பிரசுரங்களை வீட்டுவாசல்களில் வைத்துச் சென்றனர்.
“அடுத்த வாரம் முதல், நாங்கள் வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களுடன் பேசவுள்ளோம். மே மாதம் பொதுத் தேர்தல் வரும் எனக் கணித்தால் எங்களுக்கு இன்னும் ஏழெட்டு வாரங்கள் உள்ளன எனக் கருதலாம்,” என்றார் டாக்டர் சீ.
“நாங்கள் 2006லிருந்தே செம்பவாங்கில் மக்களின் தேவைகளை அறிந்து வந்துள்ளோம். 2015ல் செம்பவாங் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி உருவானதைத் தொடர்ந்து, கடந்த இரு பொதுத் தேர்தல்களில் நாங்கள் செம்பவாங்கில் நிற்கவில்லை. “இந்நிலையில், எங்கள் கட்சி செம்பவாங்கிற்குத் திரும்பவுள்ளதாக 2022ல் அறிவித்திருந்தோம்,” என்றார் டாக்டர் தம்பையா.
மக்கள் செயல் கட்சியுடன் சந்திப்பு
இதற்கிடையே, மக்கள் செயல் கட்சியின் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லீ சானும் தொண்டூழியர்களும், ஞாயிற்றுக்கிழமை மக்களைச் சந்தித்து உரையாடினர். திருவாட்டி போ, டாக்டர் சீயைக் கண்டதும் அவருடன் கைகுலுக்கி ஓர் அன்பளிப்பையும் தந்து வாழ்த்தினார்.