தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

53 பெண் வேட்பாளர்களில் ஒருவர் அதிர்ஷ்டசாலி

2 mins read
7ddf3d63-718c-4312-a099-c78713ee2554
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியின்றி வென்ற அறிமுக வேட்பாளர் டயானா பாங். - படம்: எஸ்பிஎச் மீடியா

1970களிலும் 1980களின் தொடக்கத்திலும் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட பெண் இல்லை. 1984ல் மூன்று பெண் எம்.பி.க்கள் இருந்தனர். பின்னர், படிப்படியாக அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது. தற்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகப் பெண்கள் தேர்தலில் நிற்கின்றனர்.

ஆளும் மக்கள் செயல் கட்சி சார்பில் 32 பெண்களும் எதிர்க்கட்சிகளின் சார்பில் 21 பெண்களும் போட்டியிடுகின்றனர். மசெக பெண் வேட்பாளர்களில் 13 பேரும் எதிர்க்கட்சிகளின் பெண் வேட்பாளர்களில் 10 பேரும் புதுமுகங்கள்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 26 பெண் எம்.பி.க்கள் இருந்தனர். அவர்களில் 23 பேர் மசெகவைச் சேர்ந்தவர்கள். மசெகவின் கேரி டான், ஏமி கோர், ஃபூ மி ஹார், இங் லிங் லிங் ஆகிய நான்கு எம்.பி.க்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால் எஞ்சிய 19 பேர் மீண்டும் களம் காண்கின்றனர். (தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இதில் அடங்கா.)

மசெகவின் 13 புதுமுகங்களில் டயானா பாங், 51, மட்டும் அதிர்ஷ்டசாலிப் பெண். அவர் மனுத்தாக்கல் செய்த மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் யாரும் போட்டியிடாததால் அறிமுகம் ஆனதுமே கைமேல் வெற்றி வந்துவிட்டது. அந்தத் தொகுதியில் திருமதி டின் பெய் லிங்கும் போட்டியின்றி வென்றாலும் அவர் ஏற்கெனவே களம் கண்டவர்.

எதிர்க்கட்சிகளில் பாட்டாளிக் கட்சிதான் அதிக பெண்களைக் களமிறக்கி உள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் மொத்தம் ஆறு பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் திருமதி பெரிஸ் வி பரமேஸ்வரி, 51, உள்ளிட்ட நால்வர் புதுமுகங்கள்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியில் திருமதி கலா மாணிக்கம், 57, உள்ளிட்ட நான்கு பெண்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் இருவர் புதுமுகங்கள்.

சீர்திருத்த மக்கள் கூட்டணி சார்பில் திருமதி விக்னேஸ்வரி வி ராமச்சந்திரன், 43, உள்ளிட்ட மூன்று பெண்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் ஜாலான் புசாரில் போட்டியிடும் சரினா அபு ஹசன், 54, புதியவர்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி சார்பிலும் மூன்று பெண்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், பைனியர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டெஃபனி டான், 37, புதுமுகம்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் இரு பெண் வேட்பாளர்களில் ஒருவர் புதியவர்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சிங்கப்பூர் ஐக்கிய கட்சி, மக்கள் சக்திக் கட்சி ஆகியன தலா ஒரு பெண் வேட்பாளரைக் களத்தில் இறக்கி உள்ளன. அவர்களில், தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வெரினா ஓங், 46, (செம்பவாங்) தேர்தல் களத்திற்குப் புதியவர்.

குறிப்புச் சொற்கள்