சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் எந்தவோர் அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி சுயேச்சையாகப் போட்டியிடுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. 2006, 2011 தேர்தல்களைத் தவிர்த்து அதன் பிறகு நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
2015 தேர்தலில், எதிர்பாராதவிதமாக இரண்டு தனித் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கினர். 2001க்குப் பிறகு ஒரு பொதுத் தேர்தலில் இரு சுயேச்சைகள் போட்டியிட்டது அப்போதுதான். சுயேச்சைகளால் புக்கிட் பாத்தோக், ராடின் மாஸ் ஆகிய இரு தனித்தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி உருவானது.
புக்கிட் பாத்தோக்கில் மசெகவின் டேவிங் ஓங் கிம் ஹுவாட், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சதாசிவம் வீரையா ஆகியோரை எதிர்த்து சமீர் சலீம் நெஜி என்பவர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஆனால், அவருக்கு 150 வாக்குகளே கிடைத்தன. அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் அது 0.60%.
ராடின்மாஸ் தொகுதியில் மசெகவின் டான் சின் சியோங், சீர்திருத்தக் கட்சியின் குமார் அப்பாவு ஆகியோருக்கு எதிராக ஹான் ஹுவி ஹுவி என்னும் 23 வயது இளம்பெண் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
கட்சி ஆதரவின்றி பெண் ஒருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டதும் ஆக இளைய வயதுடைய ஒருவர் சுயேச்சையாகக் களமிறங்கியதும் அதுதான் முதல்முறை.
அதனாலேயே எதிர்க்கட்சிகளின் பார்வை அவர்மீது பட்டது. இறுதியில் சீர்திருத்த மக்கள் கூட்டணியில் திருவாட்டி ஹான் ஐக்கியமாகி உள்ளார். வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் தேர்தலில் அந்தக் கூட்டணியின் வேட்பாளராக தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் போட்டியிடுகிறார் திருவாட்டி ஹான்.
2020 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு சுயேச்சை களமிறங்கினர். பைனியர் தனித்தொகுதியில் மசெகவின் பேட்ரிக் டே டெக் குவான், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லிம் செர் ஹோங் ஆகிய இருவருக்கும் எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்ட சியாங் பெங் வா 655 வாக்குகளைப் பெற்றார். அவர் பெற்ற வாக்கு விகிதம் 2.78%.
இப்போதைய தேர்தலிலும் இருவர் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர். ராடின் மாஸ், மவுண்ட்பேட்டன் ஆகிய தொகுதிகளில் அவர்கள் நிற்கின்றனர். அவர்களில் மவுண்ட்பேட்டன் தொகுதியில் போட்டியிடும் ஜெரமி டான், 34, என்பவருக்கு தனிச்சிறப்பு உண்டு.
அந்தத் தொகுதியில் மசெகவின் திருவாட்டி கோ ஸெ கீக்கு எதிராக அவர் களமிறங்கி உள்ளார். 2001க்குப் பிறகு ஆளும் கட்சியுடன் நேருக்கு நேர் மோதும் சுயேச்சை வேட்பாளர் என்ற வகையில் அவர் குறிப்பிடத்தக்கவர்.
ராடின் மாஸில், டேரில் லோ என்னும் 28 வயது சட்டத்துறைப் பட்டதாரி, மசெகவின் மெல்வின் யோங், சீர்திருத்த மக்கள் கூட்டணியின் குமார் அப்பாவு ஆகியோருக்கு எதிராகக் களமிறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி உள்ளார்.
சுயேச்சையாகப் போட்டியிட்டவர் வென்றதில்லை. மேலும், சுயேச்சையாகக் களமிறங்குவோர் தங்களது வைப்புத்தொகையை இழப்பது வழக்கம். இருப்பினும் 2001 தேர்தலில் மசெக வேட்பாளரை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஊய் பூன் எவ் என்பவர் 16.45% வாக்குகள் பெற்று தமது வைப்புத்தொகையை மீட்டுக்கொண்டார்.
21 வயது சிங்கப்பூர் குடிமகன் எவரும் சுயேச்சையாகப் போட்டியிடலாம். அவர் போட்டியிட விரும்பும் தொகுதியைச் சேர்ந்த ஆறு பேர் அவரது பெயரை முன்மொழிவது அவசியம்.