அங் மோ கியோ குழுத்தொகுதியில் ஒன்றாக இணைந்து ஆளும் மசெக அணியை எதிர்த்துப் போட்டியிட இரண்டு எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை.
அதனால், அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்படுவதற்கான சாத்தியம் உருவாகி உள்ளது.
மூன்றாவது கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடுவோம் என்று சிங்கப்பூர் ஐக்கிய கட்சியின் தலைமைச் செயலாளர் ஏண்டி ஷு, 42, தெரிவித்து உள்ளார்.
அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 526ல் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் சக்திக் கட்சியுடன் இணைந்து அந்தத் தொகுதியில் களம் காண உடன்பாடு கொள்ள முயன்றதாகக் குறிப்பிட்டார்.
அதற்காக மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங்குடன் பேச்சு நடத்தியபோதிலும் உடன்பாடு காண இயலவில்லை என்றார் அவர்.
மக்கள் சக்திக் கட்சி அதன் பொருளாளர் வில்லியம் லிம் தலைமையிலான அணியை அங் மோ கியோ குழுத்தொகுதியில் களமிறக்க எண்ணியுள்ளது.
தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிடவும் அந்தக் கட்சி தயாராகி வருகிறது. பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியனவும் அங்கு போட்டியிடக்கூடும் என்பதால் அந்தத் தொகுதியிலும் மும்முனைப் போட்டிக்கான சாத்தியம் நிலவுகிறது.

