மக்கள் செயல் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை பிரதமர் வோங் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டபோது 116 வேட்பாளர்களின் படங்கள் நிறைந்த காட்சித் திரை அவருக்குப் பின்னால் இருந்தது.
97 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் இருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்ற 116 பேரில் சிலர் மாற்று வேட்பாளராகத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கூறியதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.
‘மாறி வரும் உலகம், புதிய அணி, மாறாத உறுதி’ என்ற கருப்பொருளில் மசெகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர், மசெகவின் 32 புதிய வேட்பாளர்களை அறிவித்தார்.
அந்த அறிவிப்பில் இடம்பெறாதவர்களும் 116 பேரின் படங்களைக் காட்டிய திரையில் இருந்தனர்.
அவர்களில் திரு அகமது ஃபிர்தௌஸ் தாவுத், 42, திரு முஸ்தஃபா கமால், 40, திருவாட்டி நடாஷா சோய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த மூவரில் திருவாட்டி நடாஷாவைத் தவிர மற்ற இருவரும் ஊடகங்களின் கேமரா பார்வையில் இன்னும் படவில்லை.
இருப்பினும், சிஎன்ஏவிடம் பேசிய திரு ஃபிர்தௌசும் திரு முஸ்தஃபாவும் வேட்புமனு நியமன நாளன்று வேட்பாளர்களாகக் களமிறங்கத் தயார்நிலையில் உள்ளதாகக் கூறினர்.
திரு ஃபிர்தௌசும் திருவாட்டி சோயும் தேர்தல் துறையின் இணையப் பக்கத்தில் வருங்காலப் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
2016ஆம் ஆண்டு முதல் மசெக உறுப்பினரக இருந்துவரும் திரு ஃபிர்தௌஸ், “பிரதமர் வோங் என்னை வேட்பாளராகப் போட்டியிடச் சொன்னால் அதற்குத் தயாராக உள்ளேன்,” என்று கூறினார்.