தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்களிப்பு நிலையத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

2 mins read
b4218591-a373-4278-8986-35a240bd203a
மற்றொரு வாக்காளரின் சார்பாக வாக்களிப்பது குற்றம்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வருகிற சனிக்கிழமை (மே 3) வாக்களிப்பு நாள். சிங்கப்பூரின் வருங்கால அரசியல் தலைமுறையைத் தேர்ந்து எடுக்க 2.75 மில்லியன் பேர் வாக்களிக்க உள்ளனர்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிப்பு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளும் தவிர்க்க வேண்டிய அம்சங்களும் இங்கு தரப்பட்டு உள்ளன.

வாக்கு அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு நேரடியாகச் சென்று வாக்கு அட்டையைக் காண்பித்து வாக்களிக்க வேண்டும். சிங்பாசைப் பயன்படுத்தி கைப்பேசிச் செயலியில் மின்னிலக்க வாக்கு அட்டையைப் பெறலாம்.

வாக்களிக்காதவர்களின் பெயர் வாக்காளர் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி, தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பிக்கலாம்.

வாக்கு அட்டைக்குப் பதில் மின்னிலக்க வாக்கு அட்டையை, அடையாள அட்டையுடன் சேர்த்து காண்பிக்க வேண்டும். நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

வாக்காளர்களின் உடைமைகளில் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படலாம் என்பதால் வாக்களிப்பு நிலையத்துக்குப் பெரிய பைகளுடன் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கைப்பேசியுடன் செல்ல அனுமதி உண்டு என்றாலும் வாக்களிப்பு நிலையத்தில் அதனைப் பயன்படுத்தி படம் எடுக்கக்கூடாது. மதுபானம், கூர்மையான பொருள்கள் போன்றவற்றுக்குத் தடை உண்டு. செல்லப் பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் வாக்களிப்பு நிலையத்தில் தடை உண்டு.

அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களைச் சட்டையில் அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். வாக்களிப்பு நாளில் எந்த ஒரு தேர்தல் பிரசாரத்திற்கும் அனுமதி இல்லை.

வாக்குச்சீட்டில் ‘X’ முத்திரையிட்டு, அதனை மடித்து வாக்குப் பெட்டியில் செலுத்த வேண்டும். வேறு எந்த ஒரு பொருளையும் வாக்குப் பெட்டிக்குள் போடக்கூடாது.

பெட்டிக்குள் போடாமல் வாக்குச்சீட்டுடன் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறுவது குற்றம். வாக்குச்சீட்டில் கையெழுத்து அல்லது எந்த ஓர் அடையாளக் குறியும் இருந்தால் அந்த வாக்கு எண்ணப்பட மாட்டாது. வாக்கு அட்டையைச் சேதப்படுத்தவதோடு திருத்துவதோ அல்லது அதன் மீது எழுதுவதோ கூடாது.

வாக்கு அட்டையில் பெயர் அல்லது முகவரியில் தவறு இருப்பின் அவற்றைத் திருத்த முயலாமல் தேர்தல் துறையுடன் தொடர்புகொள்ள வேண்டும்.

மற்றொரு வாக்காளரின் சார்பாக வாக்களிப்பது குற்றம். சிறப்புத் தேவை உள்ளோர், மூத்தோர் போன்ற உதவி தேவைப்படுவோருக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் அதிகாரிகள் இருப்பர்.

பார்வைக் குறைபாடு உள்ளோருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் என்பதால் உதவியின்றி அவர்கள் வாக்குச்சீட்டில் முத்திரையிடலாம்.

ஒருவர் யாருக்கு வாக்களித்தார் அல்லது வாக்களிக்க விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முயலக்கூடாது. வாக்கு ரகசியமானது.

குறிப்புச் சொற்கள்