உலகின் வர்த்தகப் பங்காளி நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகள், சாதாரணப் புயல் அல்ல. அது ஒரு பேரலை போன்ற மாற்றம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
மக்கள் செயல் கட்சி பேரணியில் யூசுஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) பேசிய திரு கான், அமெரிக்க வரி விதிப்புக்கு மக்கள் செயல் கட்சியின் எதிர்வினை அளவுக்கு மீறிய ஒன்று என்ற எதிர்க்கட்சிகள் வாதத்தை குறைகூறினார்.
அமெரிக்க வரி விதிப்பு முடிவு வர்த்தக மையம் என்ற சிங்கப்பூரின் நிலைக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என்று திரு கான் தெரிவித்தார்.
“வரி விதிப்பு குறித்து மக்கள் செயல் கட்சி எடுத்திருக்கும் நிலை அளவுக்கு மீறியது என்றும் இதனால் அக்கட்சி மக்களிடையே அச்ச உணர்வைத் தூண்டுவதாகவும் சிலர் கூறுகின்றனர். அத்துடன், இதைவிடப் பெரிய புயல்களை சிங்கப்பூர் கடந்துள்ளதால் இதுபற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஆனால், உண்மையில் இது இன்னொரு புயல் மட்டும்தான் என்று நினைக்கிறீர்களா? இது ஒரு சாதாரணப் புயல் அல்ல. இது ஒரு பேரலை மாற்றம்,” என்று துணைப் பிரதமர் சொன்னார்.
தொடர்ந்து பேசிய திரு கான், “சிங்கப்பூரர்கள் கவலை கொண்டுள்ளனர், வர்த்தகங்கள் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்களையும் சிங்கப்பூரில் மையம் கொண்டுள்ளது குறித்தும் மறுஆய்வு செய்து வருகின்றனர் என்று அவர் விளக்கினார்.
“விநியோகச் சங்கிலித் தொடர்கள் மாற்றி அமைக்கப்படலாம். இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் வர்த்தகங்கள் தங்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளதுடன் ஆட்சேர்ப்பையும் குறைத்துள்ளன,” என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங்.