குழுத்தொகுதிகள், தனித்தொகுதிகளை உள்ளடக்கிய 92 இடங்களுக்கு சனிக்கிழமை (மே 3) தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் 75 இடங்களில் நேரடிப் போட்டியும் 17 இடங்களில் (3 ஐவர் தொகுதிகள், 2 தனித்தொகுதிகள்) பலமுனைப் போட்டியும் உள்ளது. இத்தனை தொகுதிகளில் பலமுனைப் போட்டி என்பது புதிய வரலாறு.
2020 தேர்தலில் 122 பேர் போட்டியிட்ட நிலையில் இப்போது 206 பேர் நிற்கின்றனர். மொத்தம் 211 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் வேறு கட்சிகள் களமிறங்காததால் அத்தொகுதியின் ஐந்து மசெக வேட்பாளர்களும் போட்டியில் இல்லை.
புதியவர்கள் அதிகம் போட்டியிட வந்துள்ள நிலையில் ஏற்கெனவே களம் கண்ட 67 பேர் மீண்டும் களம் காண்கின்றனர்.
கடந்த தேர்தலில் 76 புதுமுகங்கள் அறிமுகமான நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 89ஆகக் கூடியுள்ளது. ஆளும் மசெக, அண்மையில் இதுவரை இல்லாத அளவாக 32 பேரைப் புதிதாகக் களமிறக்கிய நிலையில் பாட்டாளிக் கட்சி 14 பேரை புதிதாகக் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் வர்த்தகம், சட்டம், நிதி, அரசாங்கச் சேவை ஆகிய துறைகளின் பின்னணியைக் கொண்டவர்கள். தகவல் தொழில்நுட்பம், கல்வி, சமூக சேவை மற்றும் கலாசாரப் பின்னணி கொண்டவர்களும் சொற்ப அளவில் போட்டியிடுகின்றனர்.
அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள் அதிகமாக வேட்பாளர்களாகி உள்ளனர். கடந்த தேர்தலில் 10ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை இப்போது 16க்கு அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் வரிசையில் பாட்டாளிக் கட்சி 26 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி 2020 தேர்தலைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாக, 15 பேரை வேட்பாளராக்கி உள்ளது. 2020 தேர்தலில் 24 வேட்பாளர்களைக் களமிறக்கிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, தற்போது 13 வேட்பாளர்களுடன் போட்டியில் உள்ளது. ஆறு கட்சிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுகின்றன.
கடந்த தேர்தலில் 40 பெண்கள் போட்டியிட்ட நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 53க்கு அதிகரித்து உள்ளது. இதுவும் வரலாற்று அதிசயம். 40 வயதுக்கு உட்பட்ட 44 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். சிங்கப்பூர் தேர்தல் களத்தில் பெண்களும் இளையர்களும் புதுமுகங்களும் அதிகமாகக் காணப்படுவது இப்போதுதான்.
வாக்காளர்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது. ஆறு மில்லியன் பேரை உள்ளடக்கிய சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஏறத்தாழ 2.76 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்று உள்ளனர். 2023 அதிபர் தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 49,000 வாக்காளர்கள் அதிகம்.

