தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழிற்சங்க அனுபவம் தொகுதிப் பணிக்கு உதவும்: இங் சீ மெங்

2 mins read
fb1ab088-b0ee-4181-8299-ddcd72c76588
உரையாடல்கள் மூலமாக என்னைத் தொழில் ரீதியாகப் பார்க்காமல், ஒரு மனிதனாக, சமூகத்தில் ஒருவனாக மக்கள் உணர்வார்கள் என்று நம்புகிறார் ஜாலான் காயு தனித்தொகுதியில் போட்டியிடும் மசெக வேட்பாளர் இங் சீ மெங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங், தொழிற்சங்கங்களுடனான தனது அனுபவத்தைக் கொண்டு, ஜாலான் காயு குடியிருப்பாளர்களின் வேலை குறித்த கவலைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளார்.

பாட்டாளிக் கட்சி வேட்பாளரான 33 வயது ஆண்ட்ரே லோவை எதிர்த்து ஜாலான் காயு தனித்தொகுதியில் களமிறங்கும் 56 வயது திரு இங், தம்மிடம் புதிய யோசனைகள் இருப்பதாகவும் இளைய ஊழியர்களை, குறிப்பாக 35 வயதுக்குட்பட்டவர்களையும், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) ஆகியோரையும் சென்றடைவதற்கான புத்தாக்க வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்காணலில் தெரிவித்தார்.

இளம் குடியிருப்பாளர்களின் வேலை பாதுகாப்பு, தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் (பிடிஓ) வீவக வீடுகளுக்கு நீண்ட காத்திருப்பு குறித்த கவலை தனது முக்கிய அக்கறையாக இருக்கும் என்ற அவர், அனைத்து வயதினரும் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவது குறித்து கவலை கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

“தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் எனும் ஒரு பெரிய அமைப்பை நடத்தி, பரந்த அளவிலான புரிதலுடன் குடியிருப்பாளர்களின் முக்கியத் தேவைகளை முன்வைத்த அனுபவம் எனக்கு உள்ளது. அது ஒரு முக்கிய தகுதியாக இருக்கும்.

“மேலும், கொள்கை உருவாக்குவதில் “அறிவையும் உணர்வையும் இணைப்பதும் சமநிலை காண்பதும்” தேசியத் தொழிற்சங்க காங்கிரசில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று.

“எடுத்துக்காட்டாக, உள்ளூர் ஊழியரணியை ஆதரிப்பதற்கும் வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு வருவதற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது,” என்றார் அவர்.

தோல்வியடைந்த மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்களின் புகலிடமாக தொழிலாளர் இயக்கம் உள்ளது என்ற பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கூறியது பற்றி கருத்துரைத்த திரு இங், “நான் நியாயமான, மரியாதைக்குரிய போட்டியை விரும்புகிறேன். நாம் எதுவாக இருந்தாலும் தேர்தல் காலத்திற்குப் பிறகு, ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூரை வலுவாக நிலைநிறுத்த முடியும்,” என்றார் அவர்.

நாடாளுமனறத்துக்குத் தேர்வுபெற்றால், ஊழியர்களுக்கு உதவும் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகக் கூறிய திரு இங், “எங்கள் அடிப்படைத் தத்துவம், நல்ல வேலை என்பது எந்தச் செலவையும் சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி. உண்மையான ஊதிய வளர்ச்சி இருக்கிறதென்றால், பணவீக்கத்தை வெல்கிறீர்கள் என்று அர்த்தம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்