வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை 5 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் அது 4 வெள்ளியாக இருந்தது.
பணவீக்கத்தைக் கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் துறை வியாழக்கிழமை (மார்ச் 27) கூறியது.
தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் செலவிடும் தொகையில் இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது 3.5 வெள்ளியில் இருந்து 4 வெள்ளியாக அந்த செலவுத் தொகை அதிகரிக்கப்பட்டது.
2020 பொதுத் தேர்தலின்போது அதில் மாற்றம் செய்யப்படவில்லை.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, பழைய தொகையில் 1 வெள்ளி உயர்த்தப்பட்டு உள்ளது.
குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குச் செலவிடும் அதிகபட்சத் தொகை, அந்தத் தொகுதியின் வேட்பாளர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்படும் என்று தேர்தல் துறை குறிப்பிட்டு உள்ளது.
பண அரசியலைத் தவிர்க்கும் நோக்கிலும் அரசியல் களத்தில் சரிசமமான போக்கை உறுதிசெய்யவும் அதிகபட்ச செலவுத் தொகை விதிக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அதிகபட்சத் தொகைக்கு மேல் வேட்பாளர்கள் செலவிடுவது சட்டத்திற்குப் புறம்பானது.

