இங் சீ மெங் சொந்த பலத்தில் தனித்தொகுதி காணலாம் எனத் தகவல்

1 mins read
65cf162d-b255-4f96-bf00-6f2110e4e12a
அண்மையில் நடைபெற்ற ஃபெர்ன்வேல் குடும்ப கேளிக்கை நிகழ்ச்சியில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளரான இங் சீ மெங், தமது சொந்தத் தகுதிகளின் அடிப்படையில் தனித்தொகுதி ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக ‘மதர்ஷிப்’ ஊடகச் செய்தி கூறியுள்ளது.

திரு இங், அண்மையில் ஃபெர்ன்வேல் மற்றும் ஜாலான் காயு வட்டாரங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள ஜாலான் காயு தனித்தொகுதியில் ஃபெர்ன்வேல் வட்டாரமும் அடங்கும். அதனால், அவர் ஜாலான் காயு தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடலாம் என்ற ஊகம் வலுவடைந்து உள்ளது.

அண்மையில் ‘சாவ் பாவ்’ நாளிதழுக்கு திரு இங் பேட்டியளித்தார்.

அப்போது மாண்டரின் மொழியில் பேசிய அவர், “நாடாளுமன்றத்திற்கு மீண்டும் நான் தேர்ந்து எடுக்கப்பட என்னுடைய சொந்தத் தகுதிகளின் அடிப்படையில் போட்டியிடலாம் என்று கருதுகிறேன்,” என்று கூறியதாக ‘மதர்ஷிப்’ தெரிவித்துள்ளது.

குழுத்தொகுதியில் இணைந்து போட்டியிடுவதைக் காட்டிலும் தனித்தொகுதியில் போட்டியிட அவர் விரும்புவதுபோலத் தெரிகிறது.

2020 பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியில் மசெக அணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர் திரு இங். அந்தத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி அணியிடம் மசெக அணி தோல்வியடைந்தது.

தோல்வி மூலம் பாடம் ஏதும் கற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அவர், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் தாமும் தமது அணியினரும் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்