பொறுப்பான எதிர்க்கட்சி நாங்கள்தான்: தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சித் தலைவர்

2 mins read
2623d396-cc20-4ea3-98d5-b61d8f631307
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தொதி உலா மேற்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செம்பவாங் குழுத்தொகுதி வாக்காளர்கள், பொறுப்பான கொள்கைகளைத் திறம்பட வகுக்கக்கூடியதொரு ஆக்ககரமான எதிர்க்கட்சியைத் தேர்ந்த எடுக்க விரும்பினால் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்கலாம் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஸ்பென்சர் இங் தெரிவித்து உள்ளார்.

உட்லண்ட்ஸ் நார்த் பிளாஸா கடைத்தொகுதியிலும் உட்லண்ட்ஸ் கிரசென்ட் புளோக் 780சி-யிலும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தொகுதி தமது கட்சியின் இதர வேட்பாளர்களுடன் தொகுதி உலா மேற்கொண்டபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தொகுதி உலா இறுதியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட செம்பாவங் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

மக்கள் செயல் கட்சியுடன் (மசெக) சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் மோதுகின்றன.

திரு இங்குடன் தொழிலதிபர் யாட்ஸெத் ஹைரிஸ், 62, விரிவுரையாளர் வெரினா ஓங், 46, நீச்சல் பயிற்றுநர் ரையியன் சுவா, 46, இணை விரிவுரையாளர் லீ வெய், 50, ஆகியோர் ஓரணியாக அந்தத் தொகுதியில் களமிறங்கி உள்ளனர்.

மசெக அணியை வழிநடத்தும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பிரசாரம் செய்தபோது, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியை மையப்படுத்திப் பேசினார்.

தேசிய ஒருமைப் பாட்டுக் கட்சியைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

அது குறித்து திரு இங்கிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கேட்டார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்பதற்கான மசெகவின் மறைமுகமான ஒப்புதல் அது என்றார் திரு இங்.

எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய திரு இங், தேர்தலில் மும்முனைப் போட்டியைத் தவிர்ப்பதற்கான யோசனையை பல்வேறு அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை என்றார்.

குறிப்புச் சொற்கள்