எதிர்க்கட்சியான சீர்திருத்த மக்கள் கூட்டணி (PAR), வரும் பொதுத் தேர்தலில் 14 வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக அறிவித்து உள்ளது.
இரண்டு குழுத் தொகுதிகளிலும் ஐந்து தனித் தொகுதிகளிலும் போட்டியிட தமது கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் லிம் தியென் தெரிவித்து உள்ளார்.
தனித் தொகுதிகளில் பொத்தோங் பாசிர், மவுண்ட்பேட்டன், ராடின் மாஸ், குவீன்ஸ்டவுன், இயோ சூ காங், குழுத் தொகுதிகளில் ஜாலான் புசார், தஞ்சோங் பகார் ஆகியவற்றில் வேட்பாளர்களைக் களமிறக்க அந்தக் கூட்டணி தயாராகி வருகிறது.
அதேநேரம், இதர கட்சிகளுக்கு வழிவிட்டு மேரிமவுண்ட், கெபுன் பாரு, ஜாலான் காயு ஆகிய தனித் தொகுதிகளில் போட்டியிடவில்லை என்று திரு லிம் கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தமது கூட்டணிக் கட்சியினருடன் தொகுதி உலா சென்ற அவர், பெக் கியோ சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்த உணவங்காடி நிலையம் ஜாலான் புசார், தஞ்சோங் பகார் குழுத்தொகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது.
சீர்திருத்த மக்கள் கூட்டணி பொத்தோங் பாசிரில் களமிறங்கினால் அங்கு மும்முனைப் போட்டி உருவாகும். மக்கள் செயல் கட்சிக்கு எதிராக அந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக சிங்கப்பூர் மக்கள் கட்சி (SPP) ஏற்கெனவே அறிவித்துள்ளது.
திரு லிம் தோற்றுவித்த மக்கள் குரல் என்னும் கட்சியுடன் சீர்திருத்தக் கட்சியும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியும் இணைந்து சீர்திருத்த மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன. அந்தக் கூட்டணியில் இருந்த மக்கள் சக்திக் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் அதிலிருந்து விலகியது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், விக்னேஸ்வரி ராமச்சந்திரன் என்பவரைத் தமது கூட்டணியின் வேட்பாளராகத் திரு லிம் அறிமுகம் செய்துள்ளார். 43 வயதாகும் திருவாட்டி விக்னேஸ்வரி, பாலர் பள்ளி ஆசிரியர் ஆவார். கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் அவருக்கு உண்டு.
அவர் பெரும்பாலும் ஜாலான் புசார் குழுத் தொகுதியில் போட்டியிடக்கூடும்.
மற்றொரு வேட்பாளராக மஹபூப் பாட்சா, 57, என்பவரை அவர் அறிமுகம் செய்தார். குவீன்ஸ்டவுன் தனித்தொகுதியில் அவர் களமிறக்கப்படலாம்.
ஏற்கெனவே நான்கு வேட்பாளர்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது.