வரும் பொதுத் தேர்தலில் சென்ற அதிபர் தேர்தல், பொதுத் தேர்தலைவிட அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதிகரித்துள்ள வாக்காளர் எண்ணிக்கையே இதற்குக் காரணம் எனத் தேர்தல் துறை கூறியுள்ளது.
இந்தத் தேர்தலில் 2,758,846 பதிவான வாக்காளர்களுக்காக சிங்கப்பூரில் 1,303 வாக்களிப்பு நிலையங்களும் வெளிநாடுகளில் 10 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படும்.
சென்ற அதிபர் தேர்தலில் முன்னோடித் திட்டமாக 31 தாதிமை இல்லங்களில் சிறப்பு வாக்களிப்பு ஏற்பாடுகள் சோதித்துப் பார்க்கப்பட்டன. ஆனால், அவற்றில் சிக்கல்கள் இருந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
அதனால், இம்முறை வாக்களிக்க விரும்பும் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
உடற்குறையுள்ளோரும் நடமாடச் சிரமப்படுவோரும் வாகனங்களில் வந்திறங்குவதற்காகச் சிறப்பு இடங்கள் ஒதுக்கப்படும். சக்கர நாற்காலிகள், வரிசையில் முன்னுரிமை, குறைந்த உயரம் கொண்ட வாக்குச்சாவடி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வாக்களிப்பு நாள் விதிமுறைகள்
வாக்களிப்பு நாளன்று வாக்களிப்பு நிலையங்கள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வாக்காளர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் கூட்ட நிலவரம் குறித்து தெரிந்துகொள்ள VoteQ இணையத்தளத்தை (https://uat-voteq.eld.gov.sg/) நாடலாம் அல்லது தம் வாக்கு அட்டையிலுள்ள ‘கியூ ஆர்’ குறியீட்டை வருடலாம்.
முற்பகல் முன்னேரத்தில் அதிகக் கூட்டம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் முற்பகல் பின்னேரத்திலும் பிற்பகலிலும் சென்று வாக்களிக்கும்படி தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாக்காளர்கள் தம் அடையாள அட்டையையும் வாக்கு அட்டையையும் கொண்டுசெல்ல வேண்டும். அல்லது சிங்பாஸ் செயலியில் மின்னிலக்க அடையாள அட்டையையும் இணைய வாக்கு அட்டையையும் காண்பிக்கலாம்.
வாக்களிப்பு நிலையத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் எவரும் சுற்றித் திரியக்கூடாது.
வெளிநாட்டு வாக்காளர்கள்
வெளிநாட்டு வாக்காளர்களைப் பொறுத்தமட்டில், தேர்தல் துறையின் வாக்காளர் சேவைகள் இணையத்தளத்திலிருந்து வாக்குப் படிவத்தைப் பதிவிறக்குவது தொடர்பில் ஏப்ரல் 24ஆம் தேதி மின்னஞ்சல், குறுஞ்செய்திவழி அறிவிப்பு அனுப்பப்படும்.
மே 3ஆம் தேதிக்கு முன்பு முத்திரையிடப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டை (Postal Ballot Paper) உறையிலிட்டு அஞ்சல் வழியாக அனுப்பி, மே 13ஆம் தேதிக்கு முன்பு அது தேர்தல் அதிகாரிக்குச் சென்றடையுமாறு செய்ய வேண்டும்.
வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இரவு 10 மணி முதல் தேர்தல் துறைக் கட்டடத்திலிருந்து தேர்தல் முடிவுகளை மீடியாகார்ப் நேரடியாக ஒளிபரப்பும்.
அரசியல் கட்சி ஒலிபரப்பு
குறைந்தது ஆறு வேட்பாளர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு இரண்டு அரசியல் கட்சி ஒலிபரப்பு (Political Party Broadcast) நேரங்கள் ஒதுக்கப்படும். அவை ஏப்ரல் 25ஆம் தேதியன்றும் மே 1ஆம் தேதியன்றும் தொலைக்காட்சியில் ஒருமுறையும் வானொலியில் ஒருமுறையும் இடம்பெறும்.