தெம்பனிஸ் குழுத்தொகுதியைத் தக்கவைத்த மக்கள் செயல் கட்சி அணி குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, குறிப்பாக ஆழமான பிரச்சினைகளை இன்னும் கூடுதலாகப் புரிந்துகொள்ள மீண்டும் அங்குச் செல்லவிருப்பதாக அணித் தலைவரும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
“இப்போதுதான் பொதுத் தேர்தல் முடிந்தது, எனவே எங்களுக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாங்கள் மீண்டும் மக்களைச் சந்தித்து அவர்களின் ஆழ்மனப் பிரச்சினைகளை அறிந்துகொள்ள விரும்புகிறோம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (மே 4) திரு மசகோஸ் சொன்னார்.
கடுமையான போட்டி நிலவிய தெம்பனிஸ் குழுத்தொகுதியில் திரு மசகோஸின் மக்கள் செயல் கட்சி 52.02% வாக்குகளை வென்றது.
நான்குமுனைப் போட்டியில் பாட்டாளிக் கட்சி 47.37% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் வந்தது. மக்கள் சக்திக் கட்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன.
குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது குறித்து பேசிய திரு மசகோஸ், தமது அணியை மக்கள் தேர்வு செய்ததற்கு நன்றி கூறினார்.
திரு மசகோஸின் அணியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ கூன், போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங், புதுமுகங்கள் டேவிட் நியோ, ஷார்லின் சென் ஆகியோர் இடம்பெற்றனர்.
தங்களுக்கு வாக்களித்தோர் உள்பட அனைத்து தெம்பனிஸ் வட்டாரவாசிகளுக்கும் சேவையாற்ற தயார் என்று டாக்டர் சென் குறிப்பிட்டார்.