எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தொகுதிகளில் போட்டியிடும் தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங்கும் தேசிய தொழிற்சங்க இயக்கத்தின் துணை தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் சூவும் தோற்றாலும் தொழிலாளர்களுக்கு உதவலாம் என்று பாட்டாளிக் கட்சியின் பிரித்தம் சிங் சனிக்கிழமை (ஏப்ரல் 26) கூறினார்.
தேசிய தொழிற்சங்க இயக்கத் தலைவர்கள் மக்கள் செயல் கட்சியுடனான நெருங்கிய தொடர்பைக் குறைகூறிய திரு பிரித்தம் சிங், அவர்களுக்கு மாற்றாக பாட்டாளிக் கட்சியின் ஜாலான் காயு வேட்பாளர் ஆண்டிரே லோவையும் தெம்பனிஸ் சங்காட் தொகுதி வேட்பாளர் கென்னத் ஃபூவையும் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பாட்டாளிக் கட்சியின் திரு லோ, திரு கென்னத் ஃபூ இருவரும் முறையே மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு இங், திரு டெஸ்மண்ட் சூ இருவரையும் எதிர்த்துப் போட்டியிடுவது இங்கு நினைவுகூரத்தக்கது.
மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் பற்றிக் கூறிய திரு பிரித்தம் சிங், திரு இங்கும் திரு சூவும் தேர்தலில் தோல்வியுற்றாலும் அநேகமாக தொழிலாளர் இயக்கத்தில் பணிபுரிவர் என்று கூறினார்.
அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொழிலாளர் இயக்கத்தின் முதுகெலும்பாக விளங்கும் சாதாரணத் தொழிலாளர்களின் உதவியுடன் அவர்களுக்கு சேவை செய்யலாம் என்றும் திரு பிரித்தம் சிங் தெரிவித்தார்.
தொழிலாளர் இயக்கம் தோற்கும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு துள்ளி எழும் மேடைபோல் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். தேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளதால், திரு இங், திரு சூ இருவரும் தொடர்ந்து தொழிலாளர்களுக்காக அரசிடம் வாதிடலாம் என்று திரு சிங் கூறினார்.
அரசியல்வாதி ஒருவருக்கு தொழிலாளர் இயக்கம் மிகவும் பாதுகாப்பான ஒரு துள்ளி எழும் மேடையாக சிங்கப்பூரில் விளங்குவதாகவும் திரு பிரித்தம் சிங் விமர்சித்தார்.