கெபுன் பாரு தொகுதி பிஎஸ்பி வேட்பாளர் ஹேஸல் புவாவின் கணவர் டோனி டான்

கெபுன் பாரு தொகுதி பிஎஸ்பி வேட்பாளர் ஹேஸல் புவாவின் கணவர் டோனி டான்

1 mins read
98852e76-1e89-490c-85d2-52147c6edbc0
2011 பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளராக சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிட்டவர் டோனி டான். - படம்: எஸ்பிஎச் மீடியா

வரும் பொதுத் தேர்தலில் கெபுன் பாரு தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அறிவித்து உள்ளது.

கட்சியின் துணைத் தலைவர் ஹேஸல் புவாவின் கணவரான 55 வயது டோனி டான் அந்த வேட்பாளர்.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 12) திரு டான் தமது மனைவியுடன் கெபுன் பாருவில் தொகுதி உலா மேற்கொண்டார்.

இந்தத் தேர்தலில், மூன்று தனித்தொகுதிகளிலும் இரண்டு குழுத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 12 வேட்பாளர்களை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி களமிறக்கத் திட்டமிட்டு உள்ளது.

2020 பொதுத் தேர்தலிலும் கெபுன் பாருவில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி போட்டியிட்டது.

அப்போது அந்தக் கட்சி சார்பில் குமரன் பிள்ளை போட்டியிட்டார். இருப்பினும் மக்கள் செயல் கட்சியின் ஹென்றி குவெக் 62.97 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரியாகப் பணியாற்றிய திரு டான், அந்தப் படையின் பல்வேறு செயலாக்க, உத்திபூர்வப் பொறுப்புகளை வகித்தவர்.

ராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் தனியார் கல்வித் துறையில் கால் பதித்த அவர், ‘ஸ்மார்ட்லேப் எடுகேஷன்’ என்னும் கல்விக்குழுமத்தை மற்றொருவருடன் இணைந்து உருவாக்கினார்.

2011 பொதுத் தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி (NSP) வேட்பாளராக சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறத் தவறியவர் திரு டான்.

2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தோற்றுவிக்கப்பட்டதும் அதன் தொண்டூழியராக அவர் இணைந்தார்.

குறிப்புச் சொற்கள்